IND vs NZ 2வது டெஸ்ட்: Virat Kohli-க்கு தவறுதலாக அவுட் கொடுத்த தேர்டு அம்பயர்..! செம கடுப்பான கோலி

By karthikeyan VFirst Published Dec 3, 2021, 3:13 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு தேர்டு அம்பயர் வீரேந்தர் ஷர்மா தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடேவில் தொடங்கியது.  காலை 9.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மைதானம் ஈரமாக இருந்த காரணத்தால் 12 மணிக்கு தொடங்கியது. முதல் செசன் முழுவதும் ஆடவில்லை.

11.30  மணிக்கு டாஸ் போடப்பட்டு 12 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த போட்டியில் ஆடாத விராட் கோலி, இந்த போட்டியில் ஆடுவதால் அஜிங்க்யா ரஹானே அணியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக ஜெயந்த் யாதவும், சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மாவிற்கு இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி:

மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதிலாக டேரைல் மிட்செல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வில்லியம்சன் ஆடாததால், டாம் லேதம் கேப்டன்சி செய்கிறார்.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம் (கேப்டன்), வில் யங், டேரைல் மிட்செல், ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), ராச்சின் ரவீந்திரா, கைல் ஜாமிசன், டிம் சௌதி, வில் சோமர்வில், அஜாஸ் படேல்.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 80 ரன்களை சேர்த்தனர். ஷுப்மன் கில் 44 ரன்னில் அஜாஸ் படேலின் பந்தில் ஆட்டமிழந்தார். இன்னிங்ஸின் 28வது ஓவரில் ஷுப்மன் கில்லை வீழ்த்திய அஜாஸ் படேல், தனது அடுத்த ஓவரான இன்னிங்ஸின் 30வது ஓவரில் புஜாரா மற்றும் கோலி ஆகிய 2 பெரிய வீரர்களையும் வீழ்த்தினார்.

இதையடுத்து மயன்க் அகர்வாலுடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இந்த போட்டியில் விராட் கோலியின் விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்னிங்ஸின் 30வது ஓவரின் கடைசி பந்தில் கோலி ஆட்டமிழந்தார். அஜாஸ் படேல் வீசிய அந்த பந்தில் கோலிக்கு கள நடுவர் எல்பிடபிள்யூ அவுட் கொடுத்தார். ஆனால் மிகுந்த நம்பிக்கையுடன் உடனடியாக ரிவியூ செய்தார் விராட்கோலி. அதை நீண்ட நேரம் ஆய்வு செய்த தேர்டு அம்பயர் வீரேந்தர் ஷர்மா அவுட் கொடுத்தார்.

ஆனால் ரீப்ளேவில் பந்து பேட்டில் பட்ட பின்னர் தான் கால்காப்பில் பட்டது என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் அதற்கு அம்பயர் தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டார். தேர்டு அம்பயர் அவுட் கொடுத்த பின்பும், கள நடுவரிடம் பந்து பேட்டில் பட்டது என்பதை தெரிவித்துவிட்டு அதிருப்தியுடன் களத்தை விட்டு வெளியேறிய விராட் கோலி, பவுண்டரி லைனை பேட்டை வைத்து அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்திவிட்டு சென்றார். 

தேர்டு அம்பயரின் தவறுதலான முடிவை புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.
 

click me!