இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்.. வேற எந்த மாற்றமும் இல்ல

By karthikeyan VFirst Published Aug 23, 2019, 10:50 AM IST
Highlights

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கார் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களில் எந்த மாற்றமும் இல்லை. 
 

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கார் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களில் எந்த மாற்றமும் இல்லை. 

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணியின் தலைமை பயிற்சியாளரை அண்மையில் கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்குழு தேர்வு செய்தது. ரவி சாஸ்திரியே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். 

இதையடுத்து பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான நேர்காணலை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கடந்த திங்கட்கிழமை நடத்தியது. ஃபிசியோவிற்கான நேர்காணலும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், நேற்று பயிற்சியாளர்களை அறிவித்தார் எம்.எஸ்.கே.பிரசாத். 

எதிர்பார்த்தபடியே பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் மட்டுமே மாற்றப்பட்டுள்ளார். இந்திய அணியின் பிரச்னையாக இருந்துவந்த 4ம் வரிசை சிக்கலுக்கு சஞ்சய் பங்காரால் 2 ஆண்டுகளாக தீர்வு காணமுடியவில்லை. அதன் எதிரொலியாக இந்திய அணி உலக கோப்பையில் தோற்று அரையிறுதியுடன் வெளியேறியது. அதனால் சஞ்சய் பங்காரின் பதவி பறிபோகும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே சஞ்சய் பங்கார் நீக்கப்பட்டு, புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். விக்ரம் ரத்தோர் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் ஆவார். ஆனால் இவரது சர்வதேச அனுபவம் மிகவும் குறைவு. இந்திய அணிக்காக வெறும் 7 ஒருநாள் மற்றும் 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களாக முறையே பரத் அருண் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவருமே தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான். அதேபோலவே அவர்களே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

click me!