ஆர்ச்சரின் வேகத்தில்அல்லு தெறித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்திடம் மண்டியிட்டு சரணடைந்த ஆஸி.,

By karthikeyan VFirst Published Aug 23, 2019, 10:28 AM IST
Highlights

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டரை தனது அதிவேகத்தில் சரித்தார் ஆர்ச்சர். 

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி லீட்ஸில் நடந்துவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையின் குறுக்கீட்டால் டிராவில் முடிந்தது. 

மூன்றாவது போட்டி லீட்ஸில் நேற்று தொடங்கியது. நேற்றும் மழையால் ஆட்டம் தாமதமாகவே தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் பான்கிராஃப்ட் நீக்கப்பட்டு மார்கஸ் ஹாரிஸ் சேர்க்கப்பட்டிருந்தார். 

தொடக்க வீரர்களாக வார்னரும் ஹாரிஸும் களமிறங்கினர். ஸ்மித் இந்த போட்டியில் ஆடாததால், வார்னர் சிறப்பாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அணியின் தேவையை உணர்ந்து வார்னர் நன்றாகவே ஆடினார். ஆனால் ஹாரிஸ் தான் வெறும் 8 ரன்களிலேயே ஆட்டமிழந்துவிட்டார். ஹாரிஸை ஆர்ச்சர் வீழ்த்த, உஸ்மான் கவாஜாவையும் அதே 8 ரன்களில் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார். 

பின்னர் வார்னருடன், ஸ்மித்துக்கு பதிலாக சேர்க்கப்பட்ட லபுஷேன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான ஸ்மித் இறங்கிய வரிசையில் லபுஷேன் இறங்கினார். அதனாலேயே அவர் மீது நெருக்கடி அதிகமாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி சிறப்பாக ஆடினார் லபுஷேன். 

இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 111 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த வார்னரை 61 ரன்களில் ஆர்ச்சர் வீழ்த்தினார். அதன்பின்னர் எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. ஒருமுனையில் லபுஷேன் களத்தில் நங்கூரமிட்டு நிற்க, மறுமுனையில் டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், கேப்டன் டிம் பெய்ன், பேட்டின்சன், கம்மின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இவர்களில் ஹெட், வேட், கம்மின்ஸ் ஆகிய மூவரும் டக் அவுட். 

தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த லபுஷேன் 71 ரன்களில் 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக நாதன் லயன் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டத்தில் 52.1 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 

click me!