சேவாக் சொன்னதுக்கு அப்படியே நேர்மாறா பண்ண கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Aug 23, 2019, 9:34 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து, முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கூறிய கருத்துக்கு நேர்மாறாக அணி தேர்வு அமைந்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று தொடங்கியது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு அணிகளுக்குமே இது முதல் போட்டி. 

இந்த போட்டியில் இந்திய அணியில் ரோஹித் - ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் யார் இறக்கப்படுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. கங்குலி, சேவாக், அக்தர் ஆகியோர் ரோஹித்தைத்தான் சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். 

ஆனால் ஹனுமா விஹாரி தான் அணியில் எடுக்கப்பட்டிருந்தார். அதேபோல இந்திய டெஸ்ட் அணியின் பிரைம் ஸ்பின்னரான அஷ்வின் எடுக்கப்படாமல் ஜடேஜா எடுக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, 25 ரன்களுக்கே மயன்க், புஜாரா, கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ராகுலும் ரஹானேவும் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜாவும் ரிஷப் பண்ட்டும் களத்தில் உள்ளனர். 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 இடங்கள் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அதில் ஒன்று, ஆறாம் வரிசை பேட்ஸ்மேன்(ரோஹித் - விஹாரி), மற்றொன்று ஸ்பின்னர்(அஷ்வின் - குல்தீப்). இந்த இரண்டு தேர்வு குறித்தும் போட்டிக்கு முன்னதாக சேவாக் கருத்து தெரிவித்திருந்தார். 

அதுகுறித்து பேசிய சேவாக், ஆடுகளத்தின் தன்மையை பார்க்க வேண்டும். பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில், 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்களுடன் களமிறங்க வேண்டும். இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி. எனவே டிரா செய்ய நினைக்காமல் ஜெயிக்க நினைக்க வேண்டும். 

நான்காம் வரிசையில் விராட், ஐந்தாம் வரிசையில் ரஹானே.. அப்படியென்றால் ஆறாம் வரிசையில் யார் இறங்குவது? ஹனுமா விஹாரி சில ஓவர்களை வீசுவார். ஆனால் என்னை கேட்டால், ரோஹித்தைத்தான் எடுக்க வேண்டும் என்று சொல்வேன். ஏனெனில் ரோஹித் பெரிய ஸ்கோர் அடிக்கக்கூடிய திறன் பெற்றவர். பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடியவர். டிக்ளேர் செய்யக்கூடிய சூழல் இருக்கும்போது, அதிரடியாக ஆடி ரன்களை குவித்துக் கொடுப்பார். 

அதேபோல் அஷ்வின் - குல்தீப் ஆகிய இருவரில் யார் என்று கேட்டால், நான் அஷ்வினைத்தான் தேர்வு செய்வேன். அணியின் முதன்மை ஸ்பின்னரை தான் அணியில் எடுக்க வேண்டும். நமது அணியின் முதன்மை ஸ்பின்னர் அஷ்வின் தான் என்றார் சேவாக். 

ஆனால் சேவாக் சொன்ன இரண்டுமே நடக்கவில்லை. ரோஹித்துக்கு பதில் ஹனுமா விஹாரி தான் அணியில் எடுக்கப்பட்டார். அதேபோல, அஷ்வினும் எடுக்கப்படவில்லை. அஷ்வின், குல்தீப் இருவருமே எடுக்கப்படவில்லை. ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  
 

click me!