IPL 2021 வெங்கடேஷ் ஐயர் அதிரடி அரைசதம்.. அதிர்ஷ்டத்தால் தப்பிய கில்.! ஒரே ஓவரில் பிரேக் கொடுத்த ஷர்துல் தாகூர்

By karthikeyan VFirst Published Oct 15, 2021, 10:41 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் சிஎஸ்கே நிர்ணயித்த 193 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் கேகேஆர் அணிக்கு வெங்கடேஷ் ஐயரும் ஷுப்மன் கில்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
 

ஐபிஎல்  14வது சீசனின் இறுதிப்போட்டி துபாயில் நடந்துவருகிறது. சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 192 ரன்களை குவித்தது.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டுப்ளெசிஸ் அதிரடியாக அடித்து ஆடி 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 86 ரன்களை குவித்தார். ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்களும், உத்தப்பா 15 பந்தில் 31 ரன்களும், மொயின் அலி 20 பந்தில் 37 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து 193 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிவரும் கேகேஆர் அணியின் தொடக்க வீரரும் அந்த அணியின் நட்சத்திர வீரருமான வெங்கடேஷ் ஐயர், ஹேசில்வுட் வீசிய இன்னிங்ஸின் 2வது ஓவரில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். ஹேசில்வுட் வீசிய 2வது ஓவரின் 3வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் கொடுத்த கேட்ச்சை அரிதினும் அரிதாக தோனி கோட்டைவிட்டார். அந்த கேட்ச் கொடுத்தபோது வெங்கடேஷ் ஐயர் வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்திருந்தார்.

ஆனால் தோனி கேட்ச்சை கோட்டைவிட்ட அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்த வெங்கடேஷ் ஐயர், தொடர்ந்து அடித்து ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய வெங்கடேஷ் ஐயர், 31 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார். 

மறுமுனையில் வெங்கடேஷ் ஐயருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிவந்த ஷுப்மன் கில், ஜடேஜா வீசிய 10வது ஓவரின் 3வது பந்தை காற்றில் தூக்கியடிக்க, அதை ராயுடு கேட்ச் பிடித்தார். ஆனால் காற்றில் பறந்த பந்து ட்ரோன் கேமரா ஒயரில் பட்டதால், அது நாட் அவுட் கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதே ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார் கில். 

தொடர்ச்சியாக 6-7 பந்துகளுக்கு மேல் ஷுப்மன் கில்லே ஸ்டிரைக்கில் இருக்க, சில பந்துகளாக ஸ்டிரைக் கிடைக்காத வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாகூரின் பந்தில் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதே ஓவரில் டக் அவுட்டானார் நிதிஷ் ராணா. ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் பிரேக் கொடுத்தார் ஷர்துல் தாகூர்.

இதையடுத்து களத்திற்கு வந்த சுனில் நரைனும் 2 பந்தில் 2 ரன்னுக்கு ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்து வெளியேற, கேகேஆர் அணி 97 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 
 

click me!