ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா - கேமரூன் க்ரீன் ஜோடியை பிரிக்க முடியாத விரக்தியில் இந்திய அணி ரிவியூ எடுத்தது. இந்திய அணி எடுத்த ரிவியூவால் கள நடுவரே சிரித்தார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரை வெல்லவும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறவும் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி கடைசி டெஸ்ட்டில் ஆடிவருகிறது.
அகமதாபாத்தில் நடந்துவரும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து அபாரமாக பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். டிராவிஸ் ஹெட் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். லபுஷேன் வெறும் 3 ரன்களுக்கு உடனடியாக ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து நின்று உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து நன்றாக ஆடினார். ஆனால் அவரை 38 ரன்களுக்கு ஜடேஜா வீழ்த்தினார். பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 17 ரன்களுக்கு ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.
170 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜாவும் கேமரூன் க்ரீனும் சேர்ந்து மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இருவரும் இணைந்து 60 ஓவர்கள் பேட்டிங் ஆடி 208 ரன்களை குவித்தனர். இருவருமே சதமடித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசிய கேமரூன் க்ரீனை 114 ரன்களுக்கு அஷ்வின் வீழ்த்தினார். அதன்பின்னர் அலெக்ஸ் கேரி(0), மிட்செல் ஸ்டார்க்(6) ஆகிய இருவரையும் அஷ்வின் வீழ்த்தினார். தொடக்க வீரராக களமிறங்கி 422 பந்துகளை எதிர்கொண்டு 180 ரன்களை குவித்த உஸ்மான் கவாஜாவை அக்ஸர் படேல் வீழ்த்தினார்.
உஸ்மான் கவாஜாவும் கேமரூன் க்ரீனும் அபாரமாக பேட்டிங் ஆடி இந்திய அணியைசோர்வடைய செய்தனர். இந்த இன்னிங்ஸில் 127 ஓவரில் ஒரு ரிவியூ கூட இந்திய அணி எடுக்கவில்லை. ரிவியூ எடுக்குமளவிற்கான, அவுட்டுக்கு மிகவும் நெருக்கமாக எந்த பந்துமே வீசப்படவில்லை. அவுட்டுக்கான வாய்ப்பே இல்லாத அளவிற்கு அவர்கள் பேட்டிங் ஆடியதால் விக்கெட் வீழ்த்தியே ஆக வேண்டிய விரக்தியில் இருந்த இந்திய அணி, 128வது ஓவரில் ஜடேஜா வீசிய பந்து ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பிட்ச்சான பந்திற்கு ரிவியூ செய்தனர். ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆகி திரும்பிய பந்தை காலை வைத்து மறைத்தார் உஸ்மான் கவாஜா. அது கண்டிப்பாக ஆஃப் ஸ்டம்ப்பை மிஸ் செய்யும் என்று தெரிந்தது. ஆனால் விரக்தியின் உச்சத்தில் இருந்ததால் அதை ரிவியூ செய்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
ரிவியூவில் பந்து ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்றது உறுதியானது. ரிவியூ பந்துக்கும் ஸ்டம்ப்புக்கும் இருந்த அதிக இடைவெளி இருந்தது. இதையடுத்து, பெரிய ஸ்க்ரீனில் ரீப்ளேவை பார்த்தபின், இதற்கு ஏன் ரிவியூ எடுத்தீர்கள் என்பதை போல அம்பர்ய் கெட்டில்பாரோ சிரித்தார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
அப்போது கமெண்ட்ரியில் இருந்த தினேஷ் கார்த்திக், 3வது அம்பயர் மதனகோபால் விழிப்புடன் இருக்கிறாரா என்று இந்திய அணி பரிசோதித்திருக்கிறது என்று கிண்டலடித்தார்.