ஒரே ஓவரில் ஆட்டத்தை புரட்டிப்போட்ட ட்ரெண்ட் போல்ட்.. புதிய மைல்கல்லை எட்டி சாதனை

By karthikeyan VFirst Published Aug 23, 2019, 12:17 PM IST
Highlights

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை வீழ்த்த போராடி கொண்டிருந்த நிலையில், ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை கெத்தாக்கினார் ட்ரெண்ட் போல்ட். 

இலங்கை - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. 

போட்டி நடக்கும் கொழும்புவில் நேற்று காலை மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இலங்கை அணியின் தொடக்க வீரர் திரிமன்னே 2 ரன்களில் சோமர்வில்லின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் தொடக்க வீரரும் கேப்டனுமான கருணரத்னேவுடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். குசால் மெண்டிஸ் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அனுபவ வீரர் மேத்யூஸ், கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்தார். 

இவர்கள் இருவரும் களத்தில் இருக்க, முதல் நாள் ஆட்டம் முடிந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, மேத்யூஸின் விக்கெட்டை வீழ்த்தினார் ட்ரெண்ட் போல்ட். பின்னர் அதே ஓவரிலேயே குசால் பெரேராவையும் வீழ்த்தினார் போல்ட். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை மிரட்டினார் போல்ட். இவரை தொடர்ந்து டிம் சௌதியும் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அரைசதம் அடித்த கருணரத்னே மற்றும் டிக்வெல்லா ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் சௌதி வீழ்த்தினார். 

மேத்யூஸின் விக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டில் போல்ட் வீழ்த்திய 250வது விக்கெட். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது நியூசிலாந்து பவுலர் என்ற பெருமையை போல்ட் பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக சர் ரிச்சர்ட் ஹேட்லி(431 விக்கெட்டுகள்) திகழ்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் 361 விக்கெட்டுகளை வீழ்த்திய டேனியல் வெட்டோரி உள்ளார். மூன்றாவது இடத்தில் ட்ரெண்ட் போல்ட் உள்ளார். 
 

click me!