சீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ்.. செம குஷியில் ராஜஸ்தான் ராயல்ஸ்

By karthikeyan VFirst Published Dec 29, 2019, 4:05 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் பரபரப்பானதாக அமைந்தது. கடைசி பந்தில் போட்டி டையில் முடிய, சூப்பர் ஓவரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. 
 

சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையேயான போட்டி சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர் அணி, 20 ஓவரில் 149 ரன்கள் அடித்தது. 150 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே சரியாக ஆடவில்லை. 

அதன்பின்னர் கேப்டன் ஹென்ரிக்ஸும், டேனியல் ஹியூக்ஸும் இணைந்து சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ஹியூக்ஸ் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ஜோர்டான் சில்க் மற்றும் எட்வர்ட்ஸ் ஆகியோர் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து ஆடிய ஹென்ரிக்ஸும் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த டாம் கரன், அதிரடியாக ஆடி வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். கடைசி ஓவரில் சிக்ஸர்ஸ் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி நம்பிக்கையளித்த டாம் கரன், இரண்டாவது பந்தில் ரன் அடிக்கவில்லை. 3 மற்றும் 4வது பந்துகளில் தலா 2 ரன்களை அடிக்க, முதல் 4 பந்தில் 10 ரன்கள் அந்த அணிக்கு கிடைத்தது. கடைசி 2 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்த டாம் கரன், கடைசி பந்தில் இரண்டாவது ரன் ஓடும்போது ரன் அவுட்டாகிவிட்டதால் போட்டி டை ஆனது. டாம் கரன் 17 பந்தில் 35 ரன்களை அடித்து போட்டியை டையாக்கினார். 

இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் சிக்ஸர்ஸ் அணி 16 ரன்கள் அடித்தது. 17 ரன்கள் என்ற இலக்குடன் தண்டர் அணி ஆடியது. சூப்பர் ஓவரை சிக்ஸர்ஸ் அணியின் சார்பில் டாம் கரன் தான் வீசினார். முதல் மூன்று பந்தில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார் டாம் கரன். நான்காவது பந்திலும் சிங்கிள் மட்டுமே கொடுத்தார். முதல் நான்கு பந்தில் தண்டர் அணி, 5 ரன்கள் அடித்தது. இதையடுத்து வெற்றிக்கு கடைசி 2 பந்திலுமே தண்டர் அணிக்கு சிக்ஸர் தேவைப்பட்டது. ஹேல்ஸ், ஐந்தாவது பந்தில் பவுண்டரியும் கடைசி பந்தில் சிக்ஸரும் அடித்தார். தண்டர் அணி சூப்பர் ஓவரில் 15 ரன்கள் அடிக்க, ஒரு ரன் வித்தியாசத்தில் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது சிட்னி சிக்ஸர்ஸ் அணி. 

ஆட்டநாயகனாக டாம் கரன் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து ஆல்ரவுண்டரான டாம் கரன், சாம் கரனின் சகோதரர். இருவருமே இங்கிலாந்து அணியில் ஆடிவருகின்றனர். டாம் கரனை அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில், அவரது அடிப்படை விலையான ஒரு கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது. முதற்கட்ட ஏலத்தில் அவரை யாருமே எடுக்கவில்லை. இரண்டாம் கட்ட ஏலத்தில் டாம் கரனை ராஜஸ்தான் அணி எடுத்தது. இந்நிலையில், அவர் பிக்பேஷ் லீக்கில் சிறப்பாக ஆடிவருவதால் அவரை ஏலத்தில் எடுத்த ராஜஸ்தான் அணி மிகுந்த உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளது. இதற்கு முந்தைய பிக்பேஷ் போட்டி ஒன்றிலும் டாம் கரன் சிறப்பாக ஆடியிருக்கிறார். 

click me!