நாங்க அந்த தொடரை ஜெயிப்போம்னு நான் நெனச்சே பார்க்கல.. பசங்க 2 பேரும் சேர்ந்து மேஜிக் பண்ணிட்டாங்க.. தாதா சொல்லும் ஃபிளாஷ்பேக்

By karthikeyan VFirst Published Dec 29, 2019, 2:51 PM IST
Highlights

2002ல் இங்கிலாந்தில் நடந்த நாட்வெஸ்ட் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான ஃபிளாஷ்பேக்கை கங்குலி பகிர்ந்துள்ளார். 

கங்குலி தலைமையிலான இந்திய அணி தான், இந்திய கிரிக்கெட்டை வேறொரு தளத்திற்கு அழைத்து சென்றது. சூதாட்ட புகாரில் சிக்கி சின்னபின்னமாகியிருந்த நிலையில், சேவாக், யுவராஜ் சிங், முகமது கைஃப், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகிய இளம் வீரர்களை கொண்டு வலுவான அணியாக கட்டமைத்தார் கங்குலி.

அதன்பின்னர் கங்குலி தலைமையிலான இளம் இந்திய படை, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றிகளை குவித்து கோலோச்சியது. கங்குலி தலைமையிலான இந்திய அணி வென்றதில் முக்கியமான தொடர்களில் ஒன்று, இங்கிலாந்தில் நடந்த நாட்வெஸ்ட் முத்தரப்பு தொடர். 

இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே நடந்த அந்த தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றதும், கேப்டன் கங்குலி, ஃபிளிண்டாஃபுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெவிலியனில் நின்று டி ஷர்ட்டை கழற்றி சுற்றியை சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.

அந்த முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. லண்டன் லார்ட்ஸில் நடந்த அந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டிரெஸ்கோதிக் மற்றும் கேப்டன் நாசர் ஹுசைன் ஆகிய இருவருமே சதமடிக்க, அந்த அணி 50 ஓவரில் 325 ரன்களை குவித்தது.

326 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் கங்குலியும் சேவாக்கும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அந்த போட்டியில் அமைத்து கொடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 14.3 ஓவரில் 106 ரன்களை குவித்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 106 ஆக இருந்தபோது, 60 ரன்களில் கங்குலி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சேவாக்கும் 45 ரன்களில் அவுட்டாக, 106 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி, 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. தினேஷ் மோங்கியா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக, 146 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. 

Also Read - போன தடவை நாம வீழ்த்தியது பெஸ்ட் டீம் இல்லனு கோலிக்கே தெரியும்.. வரலாற்று சாதனையை திரும்ப படைக்கணும்.. .. தாதா தடாலடி

இதையடுத்து, முக்கியமான வீரர்களை வீழ்த்திவிட்டதால் வெற்றி நம்பிக்கையில் இருந்த இங்கிலாந்து அணிக்கு, சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, ஆட்டத்தை தலைகீழாக திருப்பினர் யுவராஜ் சிங்கும் கைஃபும். 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு, 6வது விக்கெட்டுக்கு 121 ரன்களை குவித்தது யுவராஜ் - கைஃப் ஜோடி. அப்போதைய இளம் வீரர்களான இருவரும் இணைந்து பொறுப்புடனும் அபாரமாகவும் ஆடி ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர்.

63 பந்தில் 69 ரன்களை குவித்த யுவராஜ் சிங், இந்திய அணியின் ஸ்கோர் 41.4 ஓவரில் 267 ரன்களாக இருந்தபோது ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே ஆகியோர் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நங்கூரமிட்டு நின்று ஆடிய கைஃப், இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தார். யுவராஜ் - கைஃபின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி, கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் இலக்கை எட்டி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கைஃப் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களை அடித்திருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும், கங்குலி டி ஷர்ட்டை கழற்றி சுற்றினார். 

அதற்கு சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதும் ஃபிளிண்டாஃப், டி ஷர்ட்டை கழற்றி சுற்றினார். அந்த சம்பவத்தால் கடும் கோபமடைந்த கங்குலி, அதை மனதிலேயே வைத்திருந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, லண்டன் லார்ட்ஸில் டி ஷர்ட்டை கழற்றி சுற்றினார். கிரிக்கெட் ரசிகர்கள் எந்த காலத்திலும் மறக்க முடியாத சம்பவம் அது. 

Also Read - கங்குலி சொன்னது ரொம்ப புதுமையான, சமயோசித ஐடியா.. கிரிக்கெட் ஆஸ்திரேலியா புகழாரம்

அந்த தொடரில் வென்று 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அந்த போட்டியின்போது இருந்த மனநிலை குறித்தும் யுவராஜ் சிங் மற்றும் கைஃபின் சிறப்பான பேட்டிங் குறித்தும் பேசியுள்ளார் கங்குலி. 

இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய கங்குலி, அந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு கண்டிப்பாக இல்லை. அதற்கு முன்னர் ஏற்கனவே 2-3 இறுதி போட்டிகளில் தோற்றிருந்தோம். எனவே, மறுபடியும் ஒரு ஃபைனலில் தோற்றுவிட்டோம் என்றுதான் நினைத்தேன். நான் அவுட்டாகி சென்றதும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன். என் மீது எனக்கு கடுமையான கோபம். ஒவ்வொரு முக்கியமான ஃபைனலிலும், 300 ரன்களுக்கு மேல் எதிரணிக்கு விட்டுக்கொடுத்து விடுகிறோம். ஏன் 250 ரன்களில் சுருட்ட முடியவில்லை என்று என் மீதே எனக்கு கோபம் வந்தது. 

அந்தவகையில், 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டதால், அந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனால் யுவராஜ் சிங்கும் கைஃபும் சேர்ந்து அதிசயத்தை நிகழ்த்தினார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த போட்டியில் மட்டும் அதிசயத்தை நிகழ்த்தவில்லை. அந்த காலக்கட்டத்தில் ஆடிய முக்கியமான பல போட்டிகளில் அதே மாதிரி சிறந்த இன்னிங்ஸை ஆடி அசத்தியிருக்கிறார்கள். 

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. அந்த தொடர் முடிந்து, இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் ஆடினோம். அதில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அந்த போட்டியிலும் யுவராஜும் கைஃபும் சேர்ந்துதான் அணியை கரை சேர்த்தார்கள். அதன்பின்னர் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றோம். 

2001ல் கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, 2003ல் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகள், நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டி என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.. இந்த போட்டிகளில் எல்லாம், அப்போதைய நமது வீரர்கள், களத்தில் நிலைத்துவிட்டால், டிராவெல்லாம் கிடையாது.. கண்டிப்பாக நமக்கு வெற்றிதான். யாராவது களத்தில் நின்றுவிட்டால், அணியை கண்டிப்பாக வெற்றி பெற செய்துவிடுவார்கள்.

அதுவும் இந்த குறிப்பிட்ட போட்டியில்(நாட்வெஸ்ட் ஃபைனல்) எனக்கு இன்னொரு விஷயம் நினைவிருக்கிறது. எனது மாமா அந்த போட்டியை காண்பதற்காக லார்ட்ஸ் மைதானத்திற்கு வந்திருந்தார். 146 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டதால், இந்திய அணி தோற்றிவிடும் என்று நினைத்து, அவர் ஸ்டேடியத்திலிருந்து கிளம்பி காரில் சென்றுவிட்டார். காரில் 20 நிமிடம் சென்றபிறகு, அதன்பின்னர் இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் 210 ரன்களை எட்டிவிட்டது என்று ரேடியோவில் கேட்டுவிட்டு உடனடியாக காரை திருப்பி, மீண்டும் ஸ்டேடியத்திற்கு மேட்ச் பார்க்க வந்துவிட்டார்.

கடைசியில் நாம் வென்றுவிட்டோம். அதன்பின்னர் என்னை பார்ப்பதற்காக இரவு எட்டரை மணி வரை அங்கேயே இருந்திருக்கிறார். இதுமாதிரியான சம்பவமெல்லாம் அந்த போட்டியின் போது நடந்தது என்று கங்குலி தெரிவித்தார்.

click me!