
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி நாடு திரும்பியது. டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றனர். அவரோடு கலந்துரையாடி டிராபியோடு போட்டோஷுட் எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு மும்பை சென்ற இந்திய அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து மெரைன் டிரைவ் சென்ற இந்திய அணி வீரர்கள் நரிமன் பாய்ண்டிலிருந்து வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர்.
அப்போது வழிநெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து வான்கடே ஸ்டேடியம் வந்த இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து பேசினர். மேலும், பிசிசிஐ சார்பாக ரூ.125 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. அதன் பிறகு வீரர்கள் ஒன்றாக இணைந்து வந்தே மாதம் பாடல் பாடினர்.
கடைசியாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷிவம் துபே என்று ஒவ்வொருவரும் டான்ஸ் ஆடினர். இதையடுத்து இந்திய அணி வீரர்கள் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்த நிலையில் தான் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண சங்கீத் நிகழ்ச்சியில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் மூவரையும் மேடை ஏற்றிய நீதா மற்றும் முகேஷ் அம்பானி அவர்களை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். அப்போது பேசிய நீதா அம்பானி கூறியிருப்பதாவது: இந்த மூன்று கிரிக்கெட் வீரர்களும் தனது மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வெற்றி தனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிப்படுத்தினார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியின் உற்சாகத்தையும், கடை ஓவரில் இந்திய அணி விளையாடியதையும் நினைவு கூர்ந்த நீதா அம்பானி கிட்டத்தட்ட முடியாத என்ற சூழலிலிருந்து இந்திய அணி வெற்றியைப் பெற்றதை தேசம் எப்படி மூச்சுத் திணறலுடன் பார்த்தது என்பதை எடுத்துக்காட்டினார்.
ஹர்திக் பாண்டியா மீதான மக்களின் அன்பை அவர் எதிரொலித்தார், "கடினமான காலங்கள் நீடிக்காது, ஆனால் கடினமான மனிதர்கள் சாதிக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி பேசினார். இவரைத் தொடர்ந்து பேசிய முகேஷ் அம்பானி, இந்தியாவை பெருமைப்படுத்தியதற்காக கிரிக்கெட் வீரர்களை வாழ்த்தினார் மற்றும் இந்தியாவின் கடைசி உலகக் கோப்பை 2011 உணர்வை நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலை இவர்களின் சங்கீத் நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.தோனி, சாக்ஷி, இஷான் கிஷான், குர்ணல் பாண்டியா, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், வருண் தவான் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஜஸ்ப்ரித் பும்ரா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.