IND vs NZ கோலி உள்ளே.. சீனியர் வீரர் வெளியே..! இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Dec 2, 2021, 5:39 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி நாளை(டிசம்பர் 3) மும்பை வான்கடேவில் தொடங்குகிறது.

இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி தொடரை வெல்லும். மேலும், இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளுமே களமிறங்கும்.

முதல் டெஸ்ட்டில் விராட் கோலி ஆடாததால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர், அறிமுக டெஸ்ட்டிலேயே அபாரமாக ஆடி, முதல் இன்னிங்ஸில் சதமும் 2வது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்தார். 2 இன்னிங்ஸ்களிலுமே இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது அபாரமாக ஆடி அணியை காப்பாற்றினார்.

இந்நிலையில், 2வது டெஸ்ட்டில் விராட் கோலி ஆடுவதால், யார் நீக்கப்படுவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. கோலி இணைவதால், ஷ்ரேயாஸ் ஐயரை அவ்வளவு எளிதாக நீக்கமுடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அறிமுக டெஸ்ட்டிலேயே அபாரமாக ஆடி, தன்னை புறக்கணிக்கமுடியாதபடி செய்துவிட்டார் ஷ்ரேயாஸ் ஐயர்.

எனவே அவரை 2வது டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் புறக்கணிக்கமுடியாது. ஆனால் அதேவேளையில், சீனியர் வீரரான அஜிங்க்யா ரஹானே, அண்மைக்காலமாக படுமோசமாக ஆடிவருகிறார். அவரிடமிருந்து அணிக்கு தேவையான இன்னிங்ஸ் வருவதேயில்லை. அஜிங்க்யா ரஹானேவை இந்திய அணியிலிருந்து நீக்கிவிட்டு, எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்கள், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இருந்தது.

ஆனால் கோலி ஆடாததால் முதல் டெஸ்ட்டில் ரஹானே தான் கேப்டன்சி செய்ய வேண்டும் என்றவகையில், முதல் டெஸ்ட்டில் ஆடினார். தனக்கு கடைசியாக கிடைத்த வாய்ப்பையும் நழுவவிட்டார் ரஹானே. முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 35 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 ரன்களும் மட்டுமேஅடித்தார் ரஹானே. அவர் சொதப்பிய அதேவேளையில், ஷ்ரேயாஸ் ஐயர் தனக்கு கிடைத்த வாய்ப்பை இறுகப்பிடித்துவிட்டார்.

எனவே 2வது டெஸ்ட்டில் கோலி இணைவதால், அஜிங்க்யா ரஹானே தான் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. அதேபோல, சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

முதல் டெஸ்ட்டில் கழுத்து வலியால் அவதிப்பட்ட விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா இந்த போட்டியில் ஆடுவது சந்தேகம். எனவே அவருக்கு பதிலாக கேஎஸ் பரத் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச இந்திய அணி:

மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
 

click me!