IPL 2022 கேஎல் ராகுலை பஞ்சாப் அணி தக்கவைக்காதது ஏன்..? ஹெட்கோச் அனில் கும்ப்ளே விளக்கம்

By karthikeyan VFirst Published Dec 2, 2021, 4:58 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக, கேஎல் ராகுலை தக்கவைக்காதது ஏன் என பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே விளக்கமளித்துள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் புதிதாக இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 30ம் தேதி அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி ஆகிய அணிகள், வீரர்கள் தக்கவைப்பில் அதிகபட்சமாக வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

பஞ்சாப் கிங்ஸ் அணி மயன்க் அகர்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய 2 வீரர்களை மட்டுமே தக்கவைத்தது. கேஎல் ராகுல், முகமது ஷமி ஆகிய வீரர்களை தக்கவைக்கவில்லை. 2018 ஐபிஎல்லில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடிவந்த அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல், பேட்டிங் மற்றும் கேப்டன்சி ஆகிய இரண்டிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

ஆனாலும் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி விடுவித்தது. ராகுலை புதிய ஐபிஎல் அணியான லக்னோ அணி அணுகியதாக ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை தக்கவைக்காமல் விட்டது. நல்ல ஃபார்மில் சிறப்பாக ஆடிவரும் கேஎல் ராகுல், அவரது கெரியரின் சிறந்த ஃபார்மில் தற்போது இருக்கிறார் என்றால் மிகையல்ல. அதனால் அவர் மெகா ஏலத்தில் பங்கேற்று வேறு அணியில் ஆட விரும்பியிருக்கிறார். அதனால் தான் அவரை பஞ்சாப் அணி தக்கவைக்கவில்லை.

இந்த விஷயத்தை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள அனில் கும்ப்ளே, கேஎல் ராகுல் கடந்த 4 ஆண்டுகளாக பஞ்சாப் அணியில் ஆடிவந்தார். நான் பஞ்சாப் அணியில் இணைந்த பிறகு, 2 ஆண்டுகள் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார். பஞ்சாப் அணிக்காக மிகச்சிறந்த பங்காற்றியிருக்கிறார். அவரை தக்கவைக்கத்தான் விரும்பினோம். ஆனால் அவர் பஞ்சாப் அணியிக் நீடிக்க விரும்பவில்லை. மெகா ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பினார். ஐபிஎல் விதிப்படி, ஒரு அணியில் நீடிக்க விரும்பாத வீரரை அந்த அணி விடுவிக்க வேண்டும். அந்தவகையில் அவரது விருப்பத்திற்கு மதிப்பளித்து அவரை விடுவித்ததாக அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

click me!