IND vs NZ அவரை தூக்குங்க.. மொத்த பேட்டிங் ஆர்டரையும் மாற்றுங்க..! விவிஎஸ் லக்‌ஷ்மணின் தடாலடியான பரிந்துரை

By karthikeyan VFirst Published Dec 2, 2021, 4:01 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை விவிஎஸ் லக்‌ஷ்மண் பரிந்துரைத்துள்ளார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூரில் நடந்தது. அந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கான்பூர் டெஸ்ட்டில் விராட் கோலி ஆடாததால் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய  அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

அறிமுக டெஸ்ட்டிலேயே முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்து, அறிமுக டெஸ்ட்டில் சதமும், அரைசதமும் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக டெஸ்ட்டில் சதமும், அரைசதமும் அடித்தது கூட பெரிய விஷயமில்லை. ஆனால் அவர் அடித்த சூழல் தான் முக்கியமானது. இந்திய அணி 2 இன்னிங்ஸ்களிலுமே இக்கட்டான நிலையில் இருந்தபோது சதமும், அரைசதமும் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார் ஷ்ரேயாஸ் ஐயர்.

ஷ்ரேயாஸ் ஐயர் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி சிறப்பாக ஆடினார். இந்நிலையில், மும்பையில் நடக்கவுள்ள 2வது டெஸ்ட்டில் விராட் கோலி ஆடுவதால், இந்திய அணியில் யார் நீக்கப்படுவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. சிறப்பாக ஆடி அணியை இக்கட்டான நிலையிலிருந்து காப்பாற்றிய ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படுவாரா அல்லது ஃபார்மில் இல்லாமல் அண்மைக்காலமாக படுமோசமாக சொதப்பிவரும் புஜாரா - ரஹானே ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்படுவாரா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், ஷ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட்டின் 2 இன்னிங்ஸ்களிலும் இக்கட்டான சூழல்களில் அணிக்கு சிறப்பான பங்களிப்பு செய்திருக்கிறார். ஆனால் மயன்க் அகர்வால் 2 இன்னிங்ஸ்களிலுமே சுமாராகவே ஆடினார். அதுமட்டுமல்லாது க்ரீஸில் அசௌகரியமாக இருந்தார். எனவே மயன்க் அகர்வாலை நீக்கிவிட்டு புஜாராவை தொடக்க வீரராக இறக்கலாம். புஜாரா தொடக்க வீரராக ஏற்கனவே ஆடியிருக்கிறார். புஜாராவை தொடக்க வீரராக இறக்கிவிட்டு, 3ம் வரிசையில் ரஹானேவை இறக்கிவிட்டு, 4ம் வரிசையில் கோலியும், 5ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும் இறங்கலாம். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை தேர்வு செய்வது கடினம். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான பங்களிப்பை டிராவிட்டும் கோலியும் உதாசினப்படுத்தமாட்டார்கள் என நம்புவதாக விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

click me!