பாகிஸ்தானுக்கு எதிரா இந்திய அணியின் அதிரடி திட்டம்!! மழை வந்தா அவங்க 2 பேரும்.. வரலைனா இவங்க 2 பேரும்

By karthikeyan VFirst Published Jun 16, 2019, 12:32 PM IST
Highlights

உலக கோப்பை தொடரின் 4 போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டதால் ஏற்கனவே ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரசிகர்கள் மொத்தமாக வெறுத்துவிடுவார்கள். மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கான அணி தேர்விற்காக இந்திய அணி அதிரடி திட்டங்களை வைத்துள்ளது. 
 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான போட்டியை விட ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான். 

முதன்முறையாக உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் களம் காண்கின்றன. 

இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த போட்டி நடக்கவுள்ள மான்செஸ்டரில் மழை பெய்ய பெரும்பாலும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. விறுவிறுப்பாக நடந்துவந்த இந்த உலக கோப்பை தொடரில், தொடர் மழை காரணமாக சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக 4 போட்டிகள் கைவிடப்பட்டன. அதில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டியும் ஒன்று. 

எனவே ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள், இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் வெறுத்துவிடுவார்கள். மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கான அணி தேர்விற்காக இந்திய அணி அதிரடி திட்டங்களை வைத்துள்ளது. 

தவான் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடாததால் அவருக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார். எனவே அவர் இறங்கிவந்த நான்காவது இடத்தில் விஜய் சங்கர் இறக்கப்பட வாய்ப்புள்ளது. இதைத்தவிர இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. மழையால் போட்டி தாமதமாக பட்சத்தில், ஒரு முழுமையான 50 ஓவர் போட்டியாக இருந்தால், விஜய் சங்கர் அணியில் இருப்பார். 

ஒருவேளை மழையால் போட்டி தாமதமாகி, அதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டு 20-30 ஓவர் போட்டியாக அமையும் பட்சத்தில் குல்தீப் யாதவிற்கு பதிலாக முகமது ஷமியை அணியில் இணைக்க இந்திய அணி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதேபோல, விஜய் சங்கருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களமிறக்கும் திட்டமும் இருப்பதாக தெரிகிறது. டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் கில்லி என்பதால் அவரை இறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மழை குறுக்கீடு இல்லாமல் முழுமையான 50 ஓவர் போட்டியாக இருந்தால் விஜய் சங்கரும் குல்தீப்பும் ஆடும் லெவனில் இருப்பார்கள். மழையால் நிறைய ஓவர்கள் குறைக்கப்படும் பட்சத்தில் விஜய் சங்கருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும் குல்தீப்புக்கு பதிலாக ஷமியும் இறங்குவார்கள். 

50 ஓவர் போட்டியாக நடக்கும் பட்சத்தில் உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ராகுல், விராட் கோலி(கேப்டன்), விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா. 

ஓவர்கள் குறைக்கப்படும் பட்சத்தில் உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ராகுல், விராட் கோலி(கேப்டன்), தினேஷ் கார்த்திக், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷமி, சாஹல், பும்ரா. 
 

click me!