2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Feb 28, 2020, 12:28 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அபாரமாக செயல்பட்ட நிலையில், இந்திய அணி பேட்டிங் - பவுலிங் இரண்டிலும் படுமோசமாக செயல்பட்டு மோசமாக தோற்றது. 

இந்திய அணி தோல்வியடைந்த விதம் தான் அனைவருக்கும் வருத்தமளிக்கக்கூடியது. இந்திய அணியில் பேட்டிங்கில் மயன்க் அகர்வால் மற்றும் பவுலிங்கில் இஷாந்த் சர்மா ஆகிய இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 2 இன்னிங்ஸ்களிலும் ஏமாற்றமளித்தார். ரிஷப் பண்ட் ஒரு இன்னிங்ஸில் ரன் அவுட்டானார். இல்லையெனில் சிறப்பாக ஆடியிருக்கக்கூடும். அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் புஜாரா ஆகிய இருவரும் சரியாக ஆடவில்லை. புஜாராவும் ஹனுமா விஹாரியும் படுமந்தமாக பேட்டிங் ஆடினர். அணிக்கு பிரயோஜனமே இல்லாத இன்னிங்ஸை ஆடினர். பும்ராவின் பவுலிங் எடுபடாதது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 

அதேபோல ஸ்பின்னிற்கு பெரியளவில் சாதகமில்லாத நியூசிலாந்து ஆடுகளத்தில் அஷ்வினின் ஸ்பின் பவுலிங் எடுபடவில்லை. அஷ்வின் பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை. இப்படியாக அனைத்துமே இந்திய அணிக்கு எதிராகவே அமைந்துவிட்டது. அதனால் படுமோசமான தோல்வியை இந்திய அணி சந்திக்க நேர்ந்தது. 

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. எனவே இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளது. 

இரண்டாவது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் கண்டிப்பாக அணியில் சேர்க்கப்படுவார். கடந்த 2-3 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்துவரும் கில்லுக்கு ஆடும் லெவனில் இதுவரை வாய்ப்பளிக்கப்படவில்லை. நாளை தொடங்கும் இரண்டாவது போட்டியில் அவர் ஆடுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால் பிரித்வி ஷாவிற்கு பதிலாக அல்ல. ஹனுமா விஹாரிக்கு பதிலாக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. 

ஏனெனில் பிரித்வி ஷா அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பில்லை. பிரித்வி ஷா முதல் போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்காவிட்டாலும், அவர் மீது கேப்டனும் அணி நிர்வாகமும் அளாதியான நம்பிக்கை வைத்துள்ளது. இதற்கிடையே காலில் காயம் ஏற்பட்டு பயிற்சியில் கலந்துகொள்ளாமல் இருந்த பிரித்வி ஷா, காயம் குணமடைந்து, போட்டியில் ஆடும் உடற்தகுதியுடன் இருக்கிறார். அதனால் அவர் தான் கண்டிப்பாக மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்குவார். 

எனவே ஹனுமா விஹாரிக்கு பதிலாக ஷுப்மன் கில் சேர்க்கப்படுவார். கில் ஆறாம் வரிசையில் இறங்குவார். அதேபோல அஷ்வின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஜடேஜாவின் பேட்டிங்கை கருத்தில்கொண்டு இந்த முடிவெடுக்கப்படலாம்.

Also Read - விராட் கோலி விவகாரத்தில் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல நறுக்குனு கருத்து சொன்ன கபில் தேவ்

2வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா. 
 

click me!