விராட் கோலி விவகாரத்தில் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல நறுக்குனு கருத்து சொன்ன கபில் தேவ்

By karthikeyan VFirst Published Feb 28, 2020, 11:38 AM IST
Highlights

விராட் கோலி கடந்த சில போட்டிகளில் சரியாக ஆடாத நிலையில், அவர் ஃபார்ம் குறித்து பலரும் கவலைப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும், இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணம் நினைவில் வைத்துக்கொள்ளும்படியாக அமையவில்லை. ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 

டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு போட்டி தொடர்களிலும், பெரியளவில் சோபிக்காத கோலி, டெஸ்ட் போட்டியிலும் படுமோசமான ரன்னுக்கு அவுட்டாகி சென்றார். கோலி இதுமாதிரி அவுட்டாவதெல்லாம் அரிதினும் அரிது. முதல் இன்னிங்ஸில் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்த கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 19 ரன்களில் அவுட்டானார். 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே மொத்தமாக வெறும் 21 ரன்கள் மட்டுமே அடித்தார். 

டெஸ்ட் போட்டியில் மட்டுமல்ல; ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் கோலி சரியாக ஆடவில்லை. 5 டி20 போட்டிகளில் நான்கில் கோலி ஆடினார். 4வது போட்டியில் மட்டும் ஆடவில்லை. எனவே அந்த நான்கு போட்டிகளில் 45, 11, 38, 11 ரன்கள் மட்டுமே அடித்தார். 3 ஒருநாள் போட்டிகளில் முறையே 51, 15 மற்றும் 9 ரன்கள் அடித்தார். முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 21 ரன்கள் அடித்தார்.

கோலி சரியாக ஆடாதது தான் இந்திய அணியின் போட்டி முடிவில் எதிரொலிக்கிறது. கோலி நன்றாக ஆடினால் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும். கோலி ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டியில் சரியாக ஆடாததால் அணியும் தோல்வியை தழுவியது. 

கோலி ஃபார்மில் இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் கவலையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. இந்நிலையில், தனது ஃபார்ம் குறித்து பேசிய கோலி, நான் நன்றாகத்தான் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறேன். எனது பேட்டிங்கில் எந்த பிரச்னையும் இல்லை. சில நேரங்களில் ஸ்கோர் செய்யாததை வைத்து பேட்டிங்கை மதிப்பிட முடியாது.  இடைவெளியே இல்லாமல் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடும்போது இடையில் 3-4 இன்னிங்ஸ்களில் சரியாக ஸ்கோர் செய்ய முடியாமல் போவது இயல்புதான். ஒரு இன்னிங்ஸில் சரியாக ஆடவில்லையென்றாலே வெளியில் ஏதாவது பேசத்தான் செய்வார்கள். ஆனால் நானும் அதே பார்வையில் எனது பேட்டிங்கை பார்க்கமுடியாது என்று தெரிவித்திருந்தார். 

Also Read - இந்த லெட்சணத்துல ஆடுனா எப்படி ஜெயிக்க முடியும்..? சீனியர் வீரரை விளாசிய விராட் கோலி

இந்நிலையில், கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கபில் தேவ், கோலியின் பேட்டிங் குறித்து அவர் தான் கவலைப்பட வேண்டும். நாம் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்? அவர் தலைசிறந்த வீரர். எனவே அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து அவர் பார்த்துக்கொள்வார். ஆல்டைம் கிரேட் வீரர்களில் ஒருவராக மதிப்பிடப்படும் விராட் கோலி, அவரது ஃபார்மிற்கு மீண்டும் திரும்பி அசத்துவார். கோலி மாதிரியான சிறந்த வீரர்கள், ஃபார்மை இழந்து, மீண்டும் ஃபார்முக்கு திரும்பும்போது முன்பைவிட வலிமையுடன் திரும்புவார்கள். அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி அபாரமாக பேட்டிங் ஆடுவார் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். 

click me!