தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 37ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்னும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்னும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் குயீண்டன் டி காக், முதல் ஓவரிலேயே முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு முதல் பவர்பிளே முடிவதற்குள்ளாக ரவீந்திர ஜடேஜா பந்து வீச வந்தார். அவர், வந்த வேகத்தில் டெம்பா பவுமாவை கிளீன் போல்டாக்கினார். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா வீரர் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதில், அதிகபட்சமாக மார்கோ யான்சென் 14 ரன்கள் சேர்த்தார். ரஸ்ஸீ வான் டெர் டூசென் 13 ரன்கள் சேர்த்தார். எய்டன் மார்க்ரம் 9, ஹென்ரிச் கிளாசென் 1, டேவிட் மில்லர் 11, கேசவ் மகாராஜ் 7, கஜிசோ ரபாடா 6, லுங்கி நிகிடி 0 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணியானது 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்து 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது சிராஜ் ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஜஸ்ப்ரித் பும்ரா இந்தப் போட்டியில் விக்கெட்டுகள் கைப்பற்றவில்லை.
விராட் கோலிக்கு அவுட் தர மறுத்த நடுவர்: டிஆர்எஸ்க்கு சென்ற தென் ஆப்பிரிக்கா அப்புறம் என்ன நடந்தது?
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணி விளையாடிய 8 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 2ஆவது இடம் பிடித்துள்ளது