தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதுவரையில் நடத்தப்பட்ட 7 சீசன்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை டிராபி கைப்பற்றியிருக்கிறது. மதுரை பாந்தர்ஸ் மற்றும் டூட்டி பாட்ரியாட்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை டிராபி வென்றுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற 7ஆவது சீசனில் கோவை கிங்ஸ் டிராபி கைப்பற்றியது.
இந்த நிலையில் தான் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த சீசன் கோவை, திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. ஜூலை 5 ஆம் தேதி இன்று தொடங்கும் இந்தப் போட்டியானது வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டி உள்பட மொத்தமாக 32 போட்டிகள் நடைபெறுகிறது.
undefined
இந்த தொடரின் 2ஆவது குவாலிஃபையர் மற்றும் இறுதிப் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு போட்டியும் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. அதே போன்று 2 போட்டிகள் இருக்கும் போது பிற்பகல் 3.15 மணிக்கும், இரவு 7.15 மணிக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
பிளே ஆஃப் சுற்று போட்டியின் போது மழை குறுக்கீடு ஏற்பட்டால் போட்டியானது ரிசர்வ் டேக்கு மாற்றி அமைக்கப்படும். இந்த தொடரில் வரலாற்றில் முதல் முறையாக அதிக தொகைக்கு ஏலம் வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் சாய் கிஷோர் மற்றும் சஞ்சீவ் யாதவ் ஆகியோர் தலா ரூ.22 லட்சத்துடன் முதல் இடங்களை பிடித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக லைகா கோவை கிங்ஸ் அணியானது ரூ.21.60 லட்சத்திற்கு சாய் சுதர்சனை ஏலம் எடுத்தது. இந்த தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சீகம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் என்று மொத்தமாக 8 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்டி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதே போன்று ஃபேன்கோடு ஆப்பில் லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.