மண்ணோட டேஸ்ட் எப்படி இருந்தது? ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி!

By Rsiva kumar  |  First Published Jul 5, 2024, 2:10 PM IST

டி20 டிராபியோடு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில் ரோகித் சர்மாவிடம் மண்ணின் டேஸ்ட் எப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றியது. இதையடுத்து பார்படாஸில் தாக்கத்தை ஏற்படுத்திய பெரில் சூறாவளி அச்சுறுத்தலை கடந்து 4 நாட்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை டிராபியோடு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு சாம்பியன்ஸ் ஜெர்சி அணிந்து கொண்டு பிரதமர் மோடியை சந்திப்பதற்கு அவரது இல்லத்திற்கு சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் முதலில் டிராபியோடு அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் பிரதமர் மோடி டிராபியை கையில் வாங்கவில்லை. மேலும், ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் டிராபியை பிடித்திருந்த நிலையில் இருவரது கையையும் பற்றியவாறு பிரதமர் மோடி போஸ் கொடுத்திருந்தார்.

Tap to resize

Latest Videos

இதைத் தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார். மிகவும் ஜாலியாக சென்ற இந்த கலந்துரையாடலில் ஒவ்வொருவரிடமும் பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்போது பேசிய பிரதமர் மோடி முதலில் ரோகித் சர்மாவிடம் மண்ணின் டேஸ்ட் எப்படி இருந்து என்று கேட்டிருக்கிறார். பார்படாஸின் வெற்றியை மறந்துவிடக் கூடாது என்பதாக வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா மண் மற்றும் புல்லை சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலியிடம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முன்னதாக உங்களது மனநிலை எப்படி இருந்தது என்று கேட்டிருக்கிறார். இதற்கு காரணம் 7 போட்டிகளில் விளையாடிய கோலி மொத்தமாக 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முக்கியமான தருணத்தில் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 76 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இதன் மூலமாக இந்திய அணி கடைசியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து அக்‌ஷர் படேலிடம் டாப் ஆர்டரில் களமிறங்கியது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இதே போன்று ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவிடம் கடைசி 4 ஓவர்கள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் என்று தனியார் ஆங்கில செய்திதாளில் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன் பிறகு பிரதமர் மோடியுடன் விருந்து அருந்திய இந்திய அணி வீரர்கள் அங்கிருந்து மும்பை விமானம் நிலையம் சென்றனர்.

இதற்கிடையில் பிரதமர் மோடியுடன் தனது மனைவி சஞ்சனா கணேசன் மற்றும் மகன் அங்கத் ஆகியோருடன் இணைந்து பும்ரா புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது மோடி தனது கையில் பும்ராவின் மகன் அங்கத்தை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இதே போன்று வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது பெற்றோருடன் இணைந்து மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். விராட் கோலியும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் தான் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இந்திய வீரர்கள் தங்களது எக்ஸ் பக்கங்களில் டுவீட் பதிவிட்டனர். இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.

click me!