ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்துவரும் ஐபிஎல் போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கண்டுகளித்துவருகிறார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகின்றன.
சிஎஸ்கே அணி முதல் 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது.
சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியை வெறும் 134 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது சிஎஸ்கே அணி. 135 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுவதால் சிஎஸ்கே அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து ரசித்துவருகிறார். சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏவும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் தந்தையுடன் போட்டியை நேரில் பார்த்து ரசித்துவருகிறார். முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதியுடன் சிஎஸ்கே ஜெர்சி அணிந்து இந்த போட்டியை நேரில் கண்டுகளிக்கிறார்.