Vijay Hazare Trophy: காலிறுதியில் கர்நாடகாவை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி.! 2019ல் வாங்கிய அடிக்கு பதிலடி

Published : Dec 21, 2021, 04:46 PM IST
Vijay Hazare Trophy: காலிறுதியில் கர்நாடகாவை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி.! 2019ல் வாங்கிய அடிக்கு பதிலடி

சுருக்கம்

விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி போட்டியில் கர்நாடகா அணியை 153 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.  

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரில் 2 காலிறுதி போட்டிகள்  இன்று நடந்தன. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. டாஸ் வென்ற கர்நாடகா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் ஆடியது.

தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் பாபா அபரஜித் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஜெகதீசனுடன் இணைந்து சாய் கிஷோர் அருமையாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 2வது விக்கெட்டுக்கு ஜெகதீசனும் சாய் கிஷோரும் இணைந்து 147 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த சாய் கிஷோர் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடி சதமடித்த தொடக்க வீரர் ஜெகதீஷன் 102 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் 37 பந்தில் 44 ரன்களும், பாபா இந்திரஜித் 24 பந்தில் 31 ரன்களும் அடித்து சிறிய பங்களிப்பு செய்தனர். தமிழ்நாடு அணியின் ஃபினிஷரான ஷாருக்கான், வழக்கம்போலவே சிக்ஸர் மழை பொழிந்து சிறப்பாக ஃபினிஷ் செய்து கொடுத்தார். ஷாருக்கான் எதிர்கொண்ட 39 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 6  சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஷாருக்கானின் ஃபினிஷிங்கால் தமிழ்நாடு அணி 50 ஓவரில் 354 ரன்களை குவித்து, 355 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை கர்நாடகாவுக்கு நிர்ணயித்தது.

355 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய கர்நாடகா அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் ரன்னேஅடிக்காமல் சந்தீப் வாரியரின் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ரோஹன் கடம் 24 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கிய கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் மனீஷ் பாண்டே வெறும் 9 ரன்னில் நடையை கட்டினார்.

அபினவ் மனோகர் 34 ரன்னும், விக்கெட் கீப்பர் ஸ்ரீநிவாஸ் சரத் 43 ரன்னும் அடித்தனர். கர்நாடகா அணியின் ரன்வேகம் இன்னிங்ஸின் எந்த இடத்திலும் ஏறவேயில்லாத அதேவேளையில், விக்கெட்டும் சீரான இடைவெளியில் விழுந்துகொண்டே இருந்தது. இதையடுத்து 39 ஓவரில் வெறும் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது கர்நாடகா அணி.

151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. 2019 விஜய் ஹசாரே தொடரின் ஃபைனலில் கர்நாடகாவிடம் தோற்று கோப்பையை இழந்த தமிழ்நாடு அணி, இந்த காலிறுதி போட்டியில் கர்நாடகாவை வீழ்த்தி பழிதீர்த்துக்கொண்டது.
 

PREV
click me!

Recommended Stories

சுப்மன் கில்லை உடனே தூக்குங்க! கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு!
IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!