
தமிழ்நாடு அணி உள்நாட்டு கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி கோப்பைகளை வென்றுவருகிறது. உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரை வென்ற தமிழ்நாடு அணி, உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரிலும் அபாரமாக ஆடிவருகிறது.
லீக் சுற்றில் போதுமான வெற்றிகளை குவித்து காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி, இன்று ஜெய்ப்பூரில் நடந்துவரும் காலிறுதி போட்டியில் கர்நாடகாவை எதிர்கொண்டு ஆடிவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி, 50 ஓவரில் 354 ரன்களை குவித்தது. 355 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை கர்நாடகா அணி விரட்டிவருகிறது.
தமிழ்நாடு அணி 354 ரன்கள் அடிக்க, ஜெகதீஷனின் (102) அபார சதம் மற்றும் ஷாருக்கானின் காட்டடி ஃபினிஷிங் (39 பந்தில் 79 ரன்கள்) எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு ஸ்பின்னர் சாய் கிஷோரின் அரைசதமும் முக்கியம்.
தமிழ்நாடு அணியின் முன்னணி ஸ்பின்னரான சாய் கிஷோர், பவுலிங்கில் தமிழ்நாடு அணிக்காக எத்தனையோ வின்னிங் ஸ்பெல்களை வீசியிருக்கிறார். ஆனால் இந்த போட்டியில் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பு செய்தார். 24 ரன்களுக்கே முதல் விக்கெட்டை தமிழ்நாடு அணி இழந்த நிலையில், 3ம் வரிசையில் யாருமே எதிர்பார்த்திராத விதமாக இறக்கிவிடப்பட்டார் சாய் கிஷோர். தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், இந்திரஜித் ஆகியோர் இருந்தபோதிலும், நம்பிக்கை வைத்து 3ம் வரிசையீல் இறக்கிவிடப்பட்டார் சாய் கிஷோர்.
அந்த நம்பிக்கையை வீணடிக்காமல், ஜெகதீசனுடன் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடிய சாய் கிஷோர், அரைசதம் அடித்தார். 61 ரன்கள் அடித்து சாய் கிஷோர் ஆட்டமிழந்தார். ஜெகதீசனுடன் இணைந்து 2வதுவிக்கெட்டுக்கு 147 ரன்களை சேர்க்க உதவியாக இருந்தார் சாய் கிஷோர். சாய் கிஷோர் ஜெகதீசனுடன் அமைத்த பார்ட்னர்ஷிப்பால் தான் தமிழ்நாடு அணியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடிந்தது.
ஸ்பின்னரான சாய் கிஷோரை கடந்த சீசனில் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. அவருக்கு ஆடும்லெவனில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் கூட, ஸ்பின்னரான அவர் நன்றாக பேட்டிங் ஆடியிருப்பது, அடுத்த சீசனுக்கான ஏலத்தில் சாய் கிஷோருக்கான டிமாண்டை அதிகப்படுத்தியிருக்கிறது. -