இப்பலாம் வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் வேற லெவல்ல இருக்கு.. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்திய சுந்தர்.. அரையிறுதியில் தமிழ்நாடு

By karthikeyan VFirst Published Nov 28, 2019, 10:24 AM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணி, அதன் கடைசி சூப்பர் லீக் போட்டியில் ஜார்கண்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 
 

தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி சூரத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜார்கண்ட் அணியை மணிமாறன் சித்தார்த்தும் வாஷிங்டன் சுந்தரும் சேர்ந்து தங்களது சுழலில் வெறும் 85 ரன்களுக்கு சுருட்டிவிட்டனர். 

ஜார்கண்ட் அனியின் கேப்டன் சவுரப் திவாரி, விக்கெட் கீப்பர் சுமித் குமார் மற்றும் 10ம் வரிசை வீரர் விவேகானந்த் திவாரி ஆகிய மூவரும் மட்டுமே இரட்டை இலக்க ரன்னே அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 18.1 ஓவரில் 85 ரன்களுக்கு ஜார்கண்ட் அணி ஆல் அவுட்டானது. மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

வெறும் 86 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணியில், வாஷிங்டன் சுந்தர் தான் பேட்டிங்கிலும் அசத்தினார். தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷாருக்கான், இலக்கு எளிதானது என்பதால் மிகவும் மந்தமாக ஆடி 28 பந்தில் 24 ரன்கள் அடித்தார். 

மூன்றாம் வரிசையில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார். சுந்தர் பவுண்டரியே அடிக்கவில்லை, வெறும் சிக்ஸர்களாக விளாசி மிரட்டினார். 22 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் அடித்தார். மறுமுனையில் சுந்தருக்கு ஒத்துழைப்பு மட்டுமே கொடுத்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக். சுந்தரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் மந்தமாக ஆடியிருந்ததால், 86 ரன்கள் என்ற எளிய இலக்கை தமிழ்நாடு அணி 14வது ஓவரில் தான் அடித்தது. இதையடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

அரையிறுதியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது தமிழ்நாடு அணி. மற்றொரு அரையிறுதியில் கர்நாடகாவும் ஹரியானாவும் மோதுகின்றன. இந்த போட்டிகள் நாளை சூரத்தில் நடக்கவுள்ளன. 

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பொறுப்புடன் தனி ஒருவனாக போராடி தமிழ்நாடு அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த வாஷிங்டன் சுந்தர், ஜார்கண்ட் அணிக்கு எதிராகவும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். 

click me!