
இந்தியாவில் கொரோனா 2ம் அலை பரவல் தீவிரமாக இருந்த நிலையில், தற்போது குறைந்துவருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
அக்டோபர் 18ம் தேதி டி20 உலக கோப்பை இந்தியாவில் தொடங்குவதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை டி20 உலக கோப்பை இந்தியாவில் நடத்தப்படுவது உறுதி செய்யப்படவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், டி20 உலக கோப்பை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள அக்டோபர் 18க்கு முன் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிடும் என நம்பும் பிசிசிஐ, இதுகுறித்து இறுதி முடிவை அறிவிக்க ஜூலை மாதம் முதல் வாரம் வரை அவகாசம் கோரியுள்ளது.
இந்நிலையில், ஒருவேளை டி20 உலக கோப்பை இந்தியாவில் நடத்தப்பட முடியாமல் போனால், அடுத்த தேர்வாக ஐக்கிய அரபு அமீரகம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் ஐபிஎல் எஞ்சிய போட்டிகள் அமீரகத்தில் நடத்தப்படுவதால், அதை முடித்துவிட்டு டி20 உலக கோப்பையை அங்கேயே நடத்தினால், ஆடுகளங்கள் உலக கோப்பை தரத்திற்கு சரியாக இருக்காது என்பதால் இலங்கையில் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலக கோப்பையை இந்தியாவில் நடத்த முடியவில்லை என்றால், அடுத்த ஆப்சனாக பிசிசிஐ இலங்கையை தேர்வு செய்துவைத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்து முடிவெடுக்க இது மிக சீக்கிரம் என்பதே பிசிசிஐயின் கருத்தாக இருக்கிறது.