BBL 2021: மேக்ஸ்வெல்லின் காட்டடி சதம் வீண்.. ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட ஜோஷ் ஃபிலிப்! சிட்னி சிக்ஸர்ஸ் வெற்றி

By karthikeyan VFirst Published Dec 15, 2021, 8:42 PM IST
Highlights

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி நிர்ணயித்த 178 ரன்கள் என்ற இலக்கை ஜோஷ் ஃபிலிப்பின் அதிரடியான பேட்டிங்கால் கடைசி ஓவரில் அடித்து வெற்றி பெற்றது சிட்னி சிக்ஸர்ஸ் அணி.
 

ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக்கின் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மெல்போர்னில் நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற சிக்ஸர்ஸ் அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் க்ளென் மேக்ஸ்வெல் காட்டடி அடித்தார். 57 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்தார் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல்லை தவிர வேறு எந்த வீரரும் சரியாக ஆடவில்லை. ஆனாலும் தனி நபராக அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார் மேக்ஸ்வெல். 20 ஓவரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 177 ரன்கள் மட்டுமே அடித்தது. அதில் 103 ரன்கள் மேக்ஸ்வெல் அடித்தது.

இதையடுத்து 178 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஷ் ஃபிலிப், மேக்ஸ்வெல்லின் அதிரடிக்கு பதிலடி கொடுத்தார். அதிரடியாக ஆடிய ஜோஷ் ஃபிலிப் கடைசிவரை களத்தில் நிலைத்து நிற்க, மறுமுனையில் ஜேம்ஸ் வின்ஸ் (9), மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் (29), டேனியல் ஹியூக்ஸ் (11) ஆகியோர் ஆட்டமிழந்தனர். 

ஆனாலும் ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய ஜோஷ் ஃபிலிப், 61 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 99 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். ஃபிலிப்பின் பொறுப்பான பேட்டிங்கால் கடைசி ஓவரின் 4வது பந்தில் இலக்கை அடித்து சிட்னி சிக்ஸர்ஸ் அணி வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் நின்றும் கூட, ஜோஷ் ஃபிலிப்பால் சதமடிக்கவில்லை. 99 ரன்னில் இன்னிங்ஸை முடித்து ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
 

click me!