
டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார். இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விராட் கோலி விலகிவிடுவார் என்ற தகவல் வெளியாகிவந்தது. ஆனால் ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகும் ஐடியா கோலிக்கு இல்லை.
ஆனாலும், வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளை (ஒருநாள் மற்றும் டி20) வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவது சரியாக இருக்காது என்பதால், ஒருநாள் கேப்டன்சியும் ரோஹித்திடமே ஒப்படைக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டபோதே, இந்த அறிவிப்பும் வெளியானது. ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
இந்த கேப்டன்சி மாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வலம்வந்தன. ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக கோலிக்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும், அதற்குள் கோலி கேப்டன்சியிலிருந்து விலக மறுத்ததால், அவர் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் பேசப்பட்டது. கோலி பிசிசிஐ மீது அதிருப்தியில் இருப்பதாகவும், ரோஹித்தின் கேப்டன்சியில் ஆட விரும்பாததால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலக்கு கேட்டதாகவும் தகவல் வெளியானது.
இதற்கிடையே, ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து கேப்டன்சியிலிருந்து விலகியதாகவும் கூறினார். மேலும், அதன்விளைவாக வெள்ளைப்பந்து அணிகளுக்கு ஒரே கேப்டனை நியமிக்க வேண்டும் என்று தேர்வாளர்கள் விரும்பியதால் தான், கோலி நீக்கப்பட்டு ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட்டதாகவும் கங்குலி கூறியிருந்தார்.
கோலியின் கேப்டன்சி நீக்கம், கோலி - ரோஹித் மோதல் என பல சர்ச்சை பேச்சுகளுக்கு ஒரே பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார் கோலி. கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு தனது ஆதரவு எப்போதுமே இருக்கும் என்றும், அணியின் வளர்ச்சிக்கு கண்டிப்பாக பங்களிப்பேன் என்றும் நம்பிக்கையளித்தார் கோலி.
மேலும், தான் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் குறித்து பேசிய விராட் கோலி, டிசம்பர் 8ம் தேதி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக என்னை தேர்வாளர்கள் தொடர்புகொண்டனர். அதுவும், அணி தேர்வு குறித்து பேசுவதற்காக தொடர்புகொண்டனர். அதற்கு முன், நான் டி20 கேப்டன்சியிலிருந்து விலகியபின்னர் என்னிடம் ஒருநாள் கேப்டன்சி நீக்கம் குறித்து தேர்வாளர்கள் பேசவேயில்லை. டிசம்பர் 8ம் தேதி என்னை தொடர்புகொண்ட தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா, அணி தேர்வு குறித்த எனது கருத்தை கேட்டார். பின்னர் ஃபோனை வைக்கப்போகும்போது, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து என்னை நீக்க தேர்வாளர்கள் முடிவு செய்திருப்பதாக கூறினார். நான் சரி என்றேன். ஆனால் அதற்கு முன்பாக என்னிடம் இதுகுறித்து பேசவேயில்லை என்றார் கோலி.
கேப்டன்சி நீக்கம் விவகாரத்தில் விராட் கோலியை பிசிசிஐ இன்னும் கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்பதே பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் உள்ளிட்ட பலரது கருத்து.