நானும் இருக்கேன்.. தேர்வாளர்களை திரும்பி பார்க்க வைத்த பேட்டிங்.. சூர்யகுமாரின் அதிரடி சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமான கர்நாடகா

By karthikeyan VFirst Published Nov 25, 2019, 1:41 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் சூப்பர் லீக் போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி அந்த அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது மும்பை அணி. 
 

சையத் முஷ்டாக் அலி தொடரின் சூப்பர் லீக் சுற்றின் இன்றைய போட்டியில் கர்நாடகா மற்றும் மும்பை அணிகள் மோதின. சூரத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணியின் முக்கியமான வீரர்களான கேஎல் ராகுல், மனீஷ் பாண்டே மற்றும் கருண் நாயர் ஆகிய மூவரும் ஏமாற்றினர். ராகுல் டக் அவுட்டானார். கேப்டன் மனீஷ் பாண்டே 4 ரன்னிலும் கருண் நாயர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் தேவ்தத் படிக்கல்லும் ரோஹன் கடமும் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். வளர்ந்துவரும் திறமையான இளம் வீரரான படிக்கல், 34 பந்தில் 57 ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடிய ரோஹன் 47 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்தார். இவர்கள் இருவரின் அதிரடியால் கர்நாடக அணி 20 ஓவரில் 171 ரன்களை குவித்தது. 

172 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 17 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஆதித்ய தரே வெறும் 12 ரன்கள் மட்டுமே அடித்தார். மூன்றாம் வரிசையில் களத்திற்கு வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 20 பந்தில் வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்து மந்தமான இன்னிங்ஸை ஆடி அவுட்டாகிவிட்டு சென்றார். 

அதன்பின்னர் சூர்யகுமார் யாதவுடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். நல்ல ஃபார்மில் இருந்துவரும் சூர்யகுமார் யாதவ், அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். வெற்றியை நோக்கி ஆடிக்கொண்டிருந்த அவரது அதிரடி பேட்டிங்கை கர்நாடக பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் அடித்து ஆட, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து துபேவும் ஆடினார். 

அதிரடியாக ஆடிய சூர்யகுமார் அரைசதத்திற்கு பிறகு, அதிரடியை அதிகமாக்கினார். 53 பந்துகளில் 94 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, 19வது ஓவரிலேயே மும்பை அணி இலக்கை எட்ட உதவினார். இதையடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி, கர்நாடக அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

விஜய் ஹசாரே, தியோதர் டிராபி ஆகிய தொடர்களில் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்த சூர்யகுமார் யாதவ், சையத் முஷ்டாக் அலி தொடரிலும் தனது முத்திரையை பதித்துவிட்டார். இதன்மூலம் தேர்வாளர்களுக்கு, நானும் இருக்கிறேன் என்ற சிக்னலை வலுவாக கொடுத்திருக்கிறார் சூர்யகுமார். டி20 உலக கோப்பைக்கான அணியை தேர்வு செய்வதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுவரும் நிலையில், அதில் சூர்யகுமாரையும் சேர்த்தாக வேண்டும். அவரை புறந்தள்ள முடியாத சூழலை உருவாக்கிவருகிறார். 

click me!