டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அபாரமாக பேட்டிங் ஆடி 61 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ், இந்த ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்று சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 186 ரன்களை குவித்தது. 187 ர்ன்கள் என்ற இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணியை 115 ரன்களுக்கு சுருட்டி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வரும் 10ம் தேதி எதிர்கொள்கிறது.
undefined
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அபாரமாக இருந்தது. வழக்கம்போலவே களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆட ஆரம்பித்த சூர்யகுமார் யாதவ், ஜிம்பாப்வே பவுலர்கள் வீசிய சிறந்த பந்துகளையும் தனது வித்தியாசமான ஷாட்டுகளின் மூலம் சிக்ஸர்களை விளாசி மிரட்டினார்.
ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே கிட்டத்தட்ட 7-10 ஸ்டம்ப்புகள் லைனில் ஆஃப் திசையில் விலக்கி வீசப்பட்ட பந்துகளை எல்லாம் ஃபைன் லெக் மற்றும் ஸ்கொயர் லெக் திசைகளில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார் சூர்யகுமார் யாதவ். வெறும் 25 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை விளாசினார் சூர்யகுமார் யாதவ்.
இதன்மூலம் 2022ம் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் சூர்யகுமார் யாதவ். இந்த டி20 உலக கோப்பையில் 225 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ், ஒரு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த சாதனையை படைத்த 2வது சர்வதேச வீரர் சூர்யகுமார் யாதவ்.
2021ம் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் அதிரடி தொடக்க வீரர் முகமது ரிஸ்வான், ஒரு ஆண்டில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 2021ம் ஆண்டில் ரிஸ்வான் 26 இன்னிங்ஸில் 1326 ரன்களை குவித்துள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 28 இன்னிங்ஸில் 1026* ரன்களை குவித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.