தற்போதைய இந்திய அணியின் சிறந்த ஃபீல்டர் ஜடேஜாவோ கோலியோ இல்ல.. ரெய்னாவின் தேர்வு வேற வீரர்

By karthikeyan VFirst Published May 24, 2020, 9:48 PM IST
Highlights

தற்போதைய இந்திய அணியின் சிறந்த ஃபீல்டர் யார் என்று இன்னொரு சிறந்த ஃபீல்டரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணி கடந்த பத்தாண்டுகளாகவே சிறந்த ஃபீல்டிங் அணியாக திகழ்கிறது. இந்திய அணியின் ஃபீல்டிங் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. கங்குலி தலைமையிலான இந்திய அணியில் யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் மட்டுமே மிகச்சிறந்த ஃபீல்டர்களாக இருந்தனர். 

தோனி கேப்டனான பிறகு ஃபீல்டிங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஃபீல்டிங் சிறப்பாக செய்ய வேண்டுமென்றால் ஃபிட்னெஸ் அவசியம் என்பதால், வீரர்களின் ஃபிட்னெஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதன் விளைவாக, தோனி கேப்டன்சியில் இந்திய அணியின் ஃபீல்டிங் தரம் உயர்ந்தது.

தோனி தலைமையிலான இந்திய அணியில் ரெய்னா, ஜடேஜா ஆகிய இருவரும் ஃபீல்டிங்கில் சிறந்து விளங்கினர். விராட் கோலி, ரஹானே ஆகியோரும் சிறந்த ஃபீல்டர்களாக  இருந்தனர். இப்படி படிப்படியாக ஃபீல்டிங்கில் தரம் உயர்ந்த இந்திய அணி, கோலி தலைமையில் இப்போது, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு நிகரான என்பதை விட அந்த அணிகளை விட ஃபீல்டிங்கில் சிறந்து விளங்குகிறது. 

ஒரு சிறந்த ஃபீல்டர், தனது சிறப்பான ஃபீல்டிங்கால், எதிரணியின் ரன்களை குறைப்பார். பவுலர்களால் விக்கெட் வீழ்த்த முடியாத சூழல்களில், தங்களது அபாரமான ஃபீல்டிங்கால் ரன் அவுட் செய்து ஆட்டத்தின் திருப்புமுனையை ஏற்படுத்திவிடுவார்கள்.

அப்படியான சிறந்த ஃபீல்டர்களில் ஒருவர் ரெய்னா. ஜாண்டி ரோட்ஸே, டாப் 5 ஃபீல்டர்களில் ஒருவராக மதிப்பீடு செய்தவர் ரெய்னா. ரெய்னா தற்போது இந்திய அணியில் இல்லை. இந்நிலையில், அவரிடம் தற்போதைய இந்திய அணியில் யார் சிறந்த ஃபீல்டர் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ரெய்னா, அஜிங்யா ரஹானே தான் சிறந்த ஃபீல்டர். அபாரமாக கேட்ச் பிடிப்பார். அவர் ஃபீல்டிங் செய்யும் இடங்களை எப்போதுமே மிகவும் விரும்புவேன். அவரது ஃபீல்டிங் பவர் வேற லெவல். அவர் நகரும்போதே அவரது உடலும் அதற்கேற்றவாறு வளையும். இந்த விஷயத்தில் தான் அவர் மற்ற வீரர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார். 

ரஹானே மிகச்சிறந்த ஸ்லிப் ஃபீல்டர். பேட்ஸ்மேன்களின் நகர்வுகளை வைத்தே கணித்துவிடுவார் ரஹானே. ஸ்லிப் ஃபீல்டிங் செய்வது கடினம். ஏனெனில் பேட்ஸ்மேனுக்கும் ஃபீல்டருக்கும் இடையேயான தூரம் மிகக்குறைவு. ஆனால் ரஹானே தனது புத்திசாலித்தனத்தால் சிறந்த ஃபீல்டராக திகழ்கிறார். அவர் ஃபீல்டிங் பயிற்சி எடுக்கும்போதே, அப்படித்தான் எடுப்பார். அதனால் களத்தில் அவருக்கு ஃபீல்டிங் மிக எளிதாகிறது என்று ரெய்னா தெரிவித்தார். 

தற்போதைய இந்திய அணியில் ஜடேஜா மற்றும் கோலி ஆகியோரும் சிறந்த ஃபீல்டர்கள் தான். ஆனால் ரெய்னா, அவர்களைவிட ரஹானே தான் சிறந்த ஃபீல்டர் என தெரிவித்துள்ளார். ரஹானே இலங்கைக்கு எதிரான ஒரு டெஸ்ட்டில் 8 கேட்ச்களை பிடித்தார். விக்கெட் கீப்பர் அல்லாத ஒரு ஃபீல்டர் ஒரு டெஸ்ட் போட்டியில் பிடித்த அதிகபட்ச கேட்ச் அதுதான். ரஹானேவின் அந்த 8 கேட்ச் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. 
 

click me!