ஸ்டீவ் வாக்கை வார்ன் என்றைக்குமே மன்னிக்க மாட்டார்.. அவங்க சண்டைக்கு இதுதான் காரணம் - ஆஸி., முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published May 24, 2020, 7:52 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் மற்றும் ஷேன் வார்ன் ஆகிய இருவருக்கும் இடையேயான மோதலுக்கு வித்திட்ட சம்பவத்தை பகிர்ந்த மார்க் டெய்லர், ஸ்டீவ் வாக்கை ஷேன் வார்ன் என்றைக்குமே மன்னிக்கமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். 
 

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக்கிற்கும் ஷேன் வார்னேவுக்கும் இடையேயான மோதல் அனைவரும் அறிந்ததே. அவர்கள் ஒன்றாக இணைந்து ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய காலத்திலேயே அவர்களுக்கு இடையே நல்ல உறவோ நட்போ கிடையாது. 

ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடு, களத்தில் அவர்களது ஆட்டத்தில் எந்த விதத்திலும் வெளிப்பட்டதில்லை. ஆஸ்திரேலிய அணிக்காக களத்தில் இறங்கிவிட்டால், இருவரும் நன்றாகவே பழகுவார்கள்; இணைந்து செயல்படுவார்கள். ஆனால் களத்திற்கு வெளியே அவர்களுக்கு இடையே நட்பு கிடையாது.

இருவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையிலும், அவர்களுக்கு இடையிலான மோதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் நீடித்துவருகிறது. ஸ்டீவ் வாக்கை சுயநல கிரிக்கெட் வீரர் என்று ஷேன் வார்ன் விமர்சித்திருந்தார். ஸ்டீவ் வாக்கிற்கு அணி ஜெயிப்பதெல்லாம் முக்கியமில்லை. அவர் அரைசதம் அடித்தால் போதும். அதுதான் அவருக்கு முக்கியம். அவரைப்போன்ற ஒரு சுயநல கிரிக்கெட் வீரரை நான் பார்த்ததில்லை என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்டீவ் வாக் அவரது கெரியரில் 70க்கும் அதிகமானோரை ரன் அவுட்டாக்கியதாகவும் அதற்கான வீடியோ தொகுப்பையும் கிரிக்கெட் ஆவண காப்பாளர் ஒருவர் வெளியிட்டிருந்தார். அதைக்கண்ட ஷேன் வார்ன், நான் தான் பலகாலமாக சொல்லிவருகிறேனே.. ஸ்டீவ் வாக் மிகப்பெரிய சுயநல கிரிக்கெட்டர். அவர் மீது எனக்கு தனிப்பட்ட பகையெல்லாம் கிடையாது. ஆனால் அவர் சுயநல கிரிக்கெட்டர் என்று ஷேன் வார்ன் விமர்சித்தார். ஷேன் வார்ன், அவரது மனநிலையையும் கேரக்டரையும் பிரதிபலிக்கிறார் என்று ஸ்டீவ் வாக் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், ஸ்டீவ் வாக்  - ஷேன் வார்ன் மோதல் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், 1999ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வார்ன் சரியாக பந்துவீசவில்லை. அவரது தோள்பட்டை காயத்தால் அவர் சரியாக பந்துவீசவில்லை. அதனால் கடைசி டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து ஷேன் வார்னை நீக்கிவிட்டு, வேறு ஸ்பின்னரை சேர்த்தார் கேப்டன் ஸ்டீவ் வாக். அதுதான் அவர்களது மோதலுக்கு காரணம். அந்த ஒரு விஷயத்துக்காக என்றைக்குமே ஸ்டீவ் வாக்கை ஷேன் வார்ன் மன்னிக்கமாட்டார். ஷேன் வார்ன் நீக்கப்பட்டது கடினமான முடிவுதான் என்று மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
 

click me!