2019 உலக கோப்பையில் அவரு மட்டும் ஆடியிருந்தால் கோப்பை நமக்குத்தான்..! ரெய்னா அதிரடி

By karthikeyan VFirst Published Aug 22, 2020, 7:03 PM IST
Highlights

2019 உலக கோப்பையில் அம்பாதி ராயுடு ஆடியிருந்தால், இந்திய அணி கோப்பையை வென்றிருக்க வாய்ப்பிருப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
 

2019 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்டதில், இந்திய அணியும் ஒன்று. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்திய அணியும் மிகச்சிறப்பாக ஆடி லீக் சுற்றில் ஒரு போட்டியை தவிர அனைத்து போட்டிகளிலும் வென்று, அரையிறுதிக்கு தகுதிபெற்றது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியது.

இந்திய அணியின் தோல்விக்கு காரணம், மிடில் ஆர்டர் சொதப்பல் தான். லீக் சுற்றில் சிறப்பாக ஆடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதையடுத்து, மிடில் ஆர்டர் ஏற்கனவே பலவீனமாக இருந்ததால், இந்திய அணியால் இலக்கை எட்டமுடியாமல் தோல்வியை தழுவியது. இந்திய அணி டாப் ஆர்டர் பேட்டிங்கை மட்டுமே சார்ந்திருந்தது தான் தோல்விக்கு காரணம். 

உலக கோப்பைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே நான்காம் வரிசை வீரரை தேடியது இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும். நிறைய வீரர்கள் அந்த வரிசையில் இறக்கிவிடப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் அம்பாதி ராயுடு தான் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு, சிறப்பாக ஆடி நம்பிக்கையளித்தார். 2018 ஆசிய கோப்பை, 2019 நியூசிலாந்துக்கு எதிரான தொடர் என தொடர்ச்சியாக சிறப்பாக ஆடினார் ராயுடு. இதையடுத்து உலக கோப்பைக்கான இந்திய அணியின் நான்காம் வரிசை வீரர் ராயுடுதான் என்று கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது. அணி நிர்வாகமும் அந்த நம்பிக்கையை ராயுடுவுக்கு அளித்தனர். 

ஆனால் கடைசி நேரத்தில் ராயுடு அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். ராயுடுவின் புறக்கணிப்பு அவருக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராயுடு விரக்தியின் உச்சத்தில் ஓய்வே அறிவித்தார்(பின்னர் வாபஸ் பெற்றார்). இதுவரை ராயுடுவின் புறக்கணிப்பு சர்ச்சை பேசப்பட்டுவருகிறது. 

இந்நிலையில், ராயுடு உலக கோப்பையில் ஆடியிருந்தால், இந்திய அணி கோப்பையை வென்றிருக்க வாய்ப்புள்ளதாக ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிரிக்பஸ் இணையதளத்தில் பேசிய சுரேஷ் ரெய்னா, உலக கோப்பையில் நான்காம் வரிசையில் ராயுடு தான் ஆடியிருக்க வேண்டும். அவர் அதற்காக கடுமையாக உழைத்தார். உலக கோப்பைக்கு முன் ஒன்றரை ஆண்டுகள் இந்திய அணியில் சிறப்பாக ஆடினார். அப்படியிருக்கையில், 2018ல் ராயுடு உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்த போது, எனக்கு 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைத்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அந்த தொடரை நான் ரசித்து மகிழ்ந்து ஆடவில்லை. ஏனெனில் ராயுடுவின் தோல்வியில் எனக்கு வாய்ப்பு கிடைப்பதை நான் ரசிக்கவோ விரும்பவோ இல்லை.

ராயுடுதான் இந்திய அணியின் நான்காம் வரிசை வீரராக ஆடியிருக்க வேண்டும். ஒருவேளை உலக கோப்பையில் அவர் ஆடியிருந்தால், இந்திய அணி உலக கோப்பையை வென்றிருக்கும். ராயுடுதான் அந்த பேட்டிங் ஆர்டருக்கான சரியான தேர்வாக இருந்திருப்பார் என்று ரெய்னா தெரிவித்துள்ளார். 
 

click me!