சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் இன்று நடக்கும் 18ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இன்று நடக்கும் 18ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது ஹோம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி மாயங்க் அகர்வால் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக நிதிஷ் ரெட்டி இடம் பெற்றுள்ளார். மேலும், கடந்த 2 போட்டிகளில் நடராஜன் இடம் பெறாத நிலையில் இந்த போட்டியில் இடம் பெற்றுள்ளார். முதல் போட்டியில் நடராஜன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.
இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மொயீன் அலி, மகீஷ் தீக்ஷனா மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கிப்பர்), தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பதிரனா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, நிதிஷ் ரெட்டி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜெயதேவ் உனத்கட், புவனேஷ்வர் குமார், மாயங்க் மார்க்கண்டே, நடராஜன்.
இதுவரையில் ஹைதராபாத் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த ஒரு போட்டியிலும் பல சாதனைகள் படைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்து அணி என்ற சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது.
இந்த நிலையில் தான் இன்று நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 2 போட்டிகளில் வெற்றி பெற்ற சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. ஒரு போட்டியில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
இதுவரையில் இரு அணிகளும் 19 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 14 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. மேலும், 5 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது. இதில், அதிகபட்சமாக சிஎஸ்கே 223 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக 132 ரன்கள் எடுத்துள்ளது.
இதே போன்று ஹைதராபாத் அதிகபட்சமாக 192 ரன்கள் எடுத்துள்ளது. மேலும், குறைந்தபட்சமாக 134 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரையில் நடந்த போட்டிகளின் படி இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 73.68 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் முஷ்தாபிஜூர் ரஹ்மான் இடம் பெற வாய்ப்பில்லை. அவர், டி20 உலகக் கோப்பை அமெரிக்கா விசா பிரச்சனை காரணமாக வங்கதேசம் சென்றுள்ளார். அடுத்த போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023:
கடந்த ஆண்டு நடந்த ஒரு போட்டியில் சிஎஸ்கே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
2022:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2021:
சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஹென்ரிச் கிளாசென் ஸ்பின்னர்களுக்கு எதிராக 359 பந்துகளில் 696 ரன்கள் குவித்துள்ளார். இதில், 30 பவுண்டரி, 58 சிக்ஸர்களும் அடங்கும். ஹைதராபாத் அணிக்காக 6 போட்டிகளில் 334 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஸ்டிரைக் ரேட் 197.63.
இதே போன்று சிஎஸ்கே அணியில், மதீஷா பதிரனா கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இதில், 19 விக்கெட்டுகள் டெத் ஓவர்கள் என்று சொல்லப்படும் போட்டியின் கடைசி 16 முதல் 20 ஓவர்கள் வரை. இதில் பதிரனாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு 19 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். இந்த சீசனில் இதுவரையில் 17 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இதில், 12 போட்டிகளில் அந்தந்த ஹோம் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. 5 போட்டிகளில் அவே அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கடைசியாக நடந்த 4 போட்டிகளில் அவே அணியே வெற்றி பெற்றிருக்கிறது.
இதன் மூலமாக தற்போது ஐபிஎல் டிரெண்ட் மாறி வருவதாக தெரியும் நிலையில் இதே டிரெண்டில் இன்று ஹைதராபாத்தில் நடக்கும் 18ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.