ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 215 ரன்கள் என்ற கடினமான இலக்கை கடைசி பந்தில் அடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் நிலையில், அகமதாபாத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோ ரூட், த்ருவ் ஜுரெல், ஷிம்ரான் ஹெட்மயர், அஷ்வின், முருகன் அஷ்வின், சந்தீப் ஷர்மா, குல்திப் யாதவ், சாஹல்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), கிளாசன், க்ளென் ஃபிலிப்ஸ், அப்துல் சமாத், மார்கோ யான்சென், விவ்ராந்த் சர்மா, மயன்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன்.
IPL 2023: 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மண்ணில் மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 5 ஓவரில் 54 ரன்களை சேர்த்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 பந்தில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பட்லரும் சாம்சனும் இணைந்து காட்டடி அடித்து இருவருமே அரைசதம் அடித்தனர். அதிரடியாக ஆடி சதத்தை நெருங்கிய பட்லர், 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
சஞ்சு சாம்சன் 38 பந்தில் 66 ரன்கள் அடித்து கடைசிவரை நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். பட்லர், சாம்சனின் அதிரடியால் 20 ஓவரில் 214 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
215 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அன்மோல்ப்ரீத் சிங் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த அபிஷேக் ஷர்மா 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் அடித்து ஆடிய ராகுல் திரிபாதி 29 பந்தில் 47 ரன்களை விளாசி அரைசதத்தை தவறவிட்டார். ஹென்ரிச் கிளாசன் 12 பந்தில் 26 ரன்கள் அடித்து அவரும் ஆட்டமிழந்தார். கேப்டன் மார்க்ரம் 6 ரன்கள் மட்டுமே அடித்தார். 18 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 174 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. குல்திப் யாதவ் வீசிய 19வது ஓவரின் முதல் 4 பந்தில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி 5வது பந்தில் க்ளென் ஃபிலிப்ஸ் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் 24 ரன்கள் சன்ரைசர்ஸூக்கு கிடைத்தது.
IPL 2023: குஜராத்துக்கு எதிரான தோல்வி.. ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய சங்கக்கரா
கடைசி ஓவரில் சன்ரைசர்ஸுக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை சந்தீப் ஷர்மா வீச, முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த அப்துல் சமத், 2வது பந்தை தூக்கியடிக்க, லாங் ஆனில் கடினமான கேட்ச்சை பிடிக்க முடியாமல் ஜோ ரூட் கோட்டைவிட, அது சிக்ஸர் ஆனது. 3வது பந்தில் 2 ரன்களும் 4 மற்றும் 5வது பந்துகளில் தலா ஒரு ரன் மட்டுமே கிடைக்க, கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் ஷர்மா வீசிய இன்னிங்ஸின் கடைசி பந்தில் அப்துல் சமாத் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, அந்த பந்து நோ பாலானது. அதனால் ஒரு ரன் கிடைத்ததுடன், அப்துல் சமாத் அவுட்டு ஆகவில்லை. கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட, அப்துல் சமாத் அவருக்கு கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் கடைசி பந்தில் சமாத் பவுண்டரி அடிக்க சன்ரைசர்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.