T20 World Cup: India vs New Zealand போட்டியில் இந்திய அணி இந்த 2 மாற்றங்களை செய்தே தீரணும்..! கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 28, 2021, 2:23 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் அணி பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணியை ஆட்டத்தின் எந்த சூழலிலும் ஆதிக்கம் செலுத்தவிடாமல் தடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு, பாகிஸ்தானின் சிறப்பான ஆட்டமும், இந்திய அணியின் மோசமான ஆட்டமும் மட்டுமே காரணம் அல்ல. அதையும் தாண்டி இந்திய அணி அதன் சிறந்த ஆடும் லெவனுடன் களமிறங்கவில்லை என்பதே பல முன்னாள் ஜாம்பவான்களின் குற்றச்சாட்டு.

ஆம்.. ஹர்திக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டர். அவர் பந்துவீசினால் தான் அது இந்திய அணி காம்பினேஷனுக்கு வலு சேர்க்கும். ஹர்திக் பாண்டியா பந்துவீசுமளவிற்கான ஃபிட்னெஸுடன் இல்லாததால், அவர் அண்மைக்காலமாக பந்துவீசுவதேயில்லை. அதனால் இந்திய அணி சரியாக 5 பவுலர்களுடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் ஆடுவதால், 6வது பவுலிங் ஆப்சன் கிடையாது. இது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்துவிடுகிறது. ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால் அவர் பந்துவீசியாக வேண்டும். அப்படி வீசவில்லை என்றால் அவர் ஆடும் லெவனில் இடம்பெறுவது அவசியமற்றது. வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் ஹர்திக் பாண்டியாவை ஆடவைப்பது அணி காம்பினேஷனை பாதிக்கும். அந்த பாதிப்பைத்தான் பாகிஸ்தானுக்கு எதிராக அனுபவித்தது இந்தியா.

எனவே ஹர்திக் பாண்டியா பந்துவீசாத பட்சத்தில் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக, அணியின் காம்பினேஷனுக்கு வலுசேர்க்கும் வகையில் யாரையாவது சேர்க்க வேண்டும் என்பது பல முன்னாள் ஜாம்பவான்களின் கருத்தாக இருந்துவருகிறது. அதே கருத்தைத்தான் கவாஸ்கரும் வலியுறுத்தியுள்ளார். 

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, வரும் 31ம் தேதி நடக்கவுள்ள  போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணியில் 2 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் கவாஸ்கர். ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இஷான் கிஷனையும், ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக, பேட்டிங்கும் ஆடத்தெரிந்த மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரையும் சேர்க்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க - இந்த லெட்சணத்துல டீம் எடுத்தால் எப்படி ஜெயிக்கிறது? இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்த பிராட் ஹாக்

இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்டாக்கில் பேசிய சுனில் கவாஸ்கர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா பந்துவீசமாட்டார் என்றால், அவருக்கு பதிலாக அபாரமான ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனை ஆடவைக்க வேண்டும். அதேபோல புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை சேர்க்க வேண்டும். இந்த 2 மாற்றங்களை மட்டும் செய்யலாம்.  நிறைய மாற்றங்கள் செய்தால் எதிரணிக்கு நாம்(இந்திய அணி) பயப்படுகிறோம் என்பதை காட்டுவதாக அமையும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஷர்துல் தாகூர் பவுலிங்கில் முக்கியமான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுக்கவல்லவர். பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் பயனுள்ள சில ரன்களை அடித்து கொடுப்பார்.
 

click me!