ஹாரிஸ் ராஃப் மிரட்டலான பவுலிங்.. பாகிஸ்தானுக்கு எளிய இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து..!

By karthikeyan VFirst Published Oct 26, 2021, 9:29 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 134 ரன்கள் மட்டுமே அடித்து 135 ரன்கள் என்ற எளிய இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெறித்தனமாக விளையாடிவருகிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் பட்டைய கிளப்பிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியை 151 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, 152 ரன்கள் என்ற சவாலான இலக்கை விக்கெட் இழப்பின்றி அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதே உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடிவரும் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஷார்ஜாவில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடியது நியூசிலாந்து அணி.

இந்தியாவுக்கு எதிராக ஷாஹீன் அஃப்ரிடி பவுலிங்கில் மிரட்டிய நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஹாரிஸ் ராஃப் தனது வேகத்தில் மிரட்டினார். 150 கிமீ வேகத்தில் அசால்ட்டாக வீசும் ஹாரிஸ் ராஃப், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டார்.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் 17 ரன்களுக்கு ஹாரிஸ் ராஃபின் பந்தில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான டேரைல் மிட்செல் 27 ரன்னில் இமாத் வாசிமின் சுழலில் வீழ்ந்தார். ஜேம்ஸ் நீஷமை ஒரு ரன்னில் முகமது ஹஃபீஸ் வீழ்த்தினார்.

நிதானமாக தொடங்கி, பின்னர் இன்னிங்ஸை துரிதப்படுத்த ஆரம்பித்த கேன் வில்லியம்சன், அடிக்க ஆரம்பித்த மாத்திரத்தில் 25 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் டெவான் கான்வே மட்டும் ஓரளவிற்கு போராடி 27 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, 20 ஓவரில் 134 ரன்கள் மட்டுமே அடித்தது நியூசிலாந்து அணி.

இதையடுத்து 135 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது பாகிஸ்தான் அணி. அபாரமாக பந்துவீசி தனது வேகத்தால் நியூசிலாந்து வீரர்களை மிரட்டிய ஹாரிஸ் ராஃப், 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

click me!