இந்திய கிரிக்கெட்டுக்கு செம குட் நியூஸ்..! தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார் ராகுல் டிராவிட்

By karthikeyan VFirst Published Oct 26, 2021, 9:01 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் விண்ணப்பித்தார்.
 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பிசிசிஐயிடம் ஒப்புக்கொண்டதாகவும், அதனால் அடுத்த பயிற்சியாளராக அவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஐபிஎல் 14வது சீசன் முடிவடைந்த தருவாயில், பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷாவை துபாயில் சந்தித்து பேசினார் ராகுல் டிராவிட். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் ராகுல் டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க, அந்த சந்திப்பின்போது சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

ஆனால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும், ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் வெளியான தகவலை செய்தித்தாள்களில் படித்துத்தான் தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்தார் பிசிசிஐ தலைவர் கங்குலி. மேலும் துபாயில் தன்னை சந்தித்தபோது என்சிஏ-வின் வளர்ச்சி குறித்துத்தான் ராகுல் டிராவிட் பேசியதாகவும், டிராவிட் பயிற்சியாளராக விரும்பினால், அவர் விண்ணப்பிக்கலாம் என்றும் கங்குலி தெரிவித்திருந்தார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், கடைசி நாளான இன்று ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்ததை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் விண்ணப்பித்தது, வெறும் சம்பிரதாயம் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர் குழுவில் பராஸ் மஹாம்ப்ரே பவுலிங் பயிற்சியாளராகவும், அபய் ஷர்மா ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களும் அந்த பதவிகளுக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள்.

என்சிஏ தலைவராக இருக்கும் ராகுல் டிராவிட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேறும் பட்சத்தில், என்சிஏ தலைவராக விவிஎஸ் லக்‌ஷ்மண் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!