டி20 உலக கோப்பை: நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது தென்னாப்பிரிக்கா..!

By karthikeyan VFirst Published Oct 26, 2021, 7:11 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.
 

டி20 உலக கோப்பையில் க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் எவின் லூயிஸ் மற்றும் லெண்டல் சிம்மன்ஸ் ஆகிய இருவருமே மெதுவாக தொடங்கினர். ஆனால் களத்தில் சற்று நிலைத்த பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஸ்கோரை வேகமாக உயர்த்தினார் எவின் லூயிஸ்.

35 பந்துகள் பேட்டிங் ஆடி ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்தார் அவர். அவரது மந்தமான பேட்டிங், மறுமுனையில் ஆடிய லூயிஸ் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. அவரும் முடிந்தளவிற்கு அடித்து ஆடி அரைசதம் அடித்தாலும், சிம்மன்ஸின் மந்தமான பேட்டிங்கால் அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் ஒருகட்டத்திற்கு மேல் எல்லா பந்தையும் அடித்து ஆட வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், 35 பந்தில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் எவின் லூயிஸ்.

லூயிஸ் 35 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 56 ரன்களை குவித்தாலும், அவர் அவுட்டாகும்போது, 10.3 ஓவரில் வெஸ்ட் இண்டீஸின் ஸ்கோர் வெறும் 73 ரன்கள் தான். சிம்மன்ஸின் மந்தமான பேட்டிங்கால் அணியின் ஸ்கோர் வேகமெடுக்காதது, அதன்பின்னர் வந்த அனைத்து பேட்ஸ்மேன்கள் மீதும் எதிரொலித்தது. 

அடித்து ஆடியே தீர வேண்டிய கட்டாயத்தில் பூரன்(12), கெய்ல்(12), ரசல்(5), ஹெட்மயர்(1), ஹைடன் வால்ஷ்(0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பொல்லார்டு மட்டும் 26 ரன்கள் அடித்தார். பிராவோ கடைசியில் 8 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே அடித்தது. 

144 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா வெறும் 2 ரன்னுக்கு முதல் ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸும், அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாண்டர் டசனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.

பொறுப்புடன் ஆடிய ரீஸா ஹென்ரிக்ஸ் 30 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 39 ரன்கள் அடித்தார். 2வது விக்கெட்டுக்கு டசனும் ஹென்ரிக்ஸும் இணைந்து 57 ரன்கள் சேர்த்தனர். அதன்பின்னர் டசனுடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் அடித்து ஆட, டசன் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து மறுமுனையில் நிதானமாக ஆடினார்.

10வது ஓவரில் ஜோடி சேர்ந்த மார்க்ரம் - டசன் ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது. இவர்கள் இருவரும் இணைந்தே கடைசி வரை களத்தில் நின்று 19வது ஓவரின் 2வது பந்தில் இலக்கை எட்டி ஆட்டத்தை முடித்தனர்.  அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மார்க்ரம் 26 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 51 ரன்களை குவித்தார். வாண்டர் டசன் 43 ரன்கள் அடித்தார்.

19வது ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, இந்த டி20 உலக கோப்பையில் வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.
 

click me!