சிம்மன்ஸின் படுமட்ட(மந்த)மான பேட்டிங்கால் த(டு)டம் மாறிய வெஸ்ட் இண்டீஸ்..! தென்னாப்பிரிக்காவிற்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Oct 26, 2021, 5:29 PM IST
Highlights

லெண்டல் சிம்மன்ஸின் படுமந்தமான பேட்டிங்கால் 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 144 ரன்கள் என்ற எளிய இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.
 

டி20 உலக கோப்பையில் க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அனியின் தொடக்க வீரர்கள் எவின் லூயிஸ் மற்றும் லெண்டல் சிம்மன்ஸ் ஆகிய இருவருமே மெதுவாக தொடங்கினர். ஆனால் சற்று களத்தில் நிலைத்த பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஸ்கோரை வேகமாக உயர்த்தினார் எவின் லூயிஸ்.

ஆனால் சிம்மன்ஸ் படுமந்தமாக பேட்டிங் ஆடினார். அவரும் அடிப்பார், அடிப்பார் என்று எதிர்பார்த்த அனைவருக்கும் ஆப்புதான் அடித்தாரே தவிர பந்தை அடிக்கவில்லை. 35 பந்துகள் பேட்டிங் ஆடி ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்தார் அவர். அவரது மந்தமான பேட்டிங், மறுமுனையில் ஆடிய லூயிஸ் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. அவரும் முடிந்தளவிற்கு அடித்து ஆடி அரைசதம் அடித்தாலும், சிம்மன்ஸின் மந்தமான பேட்டிங்கால் அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் ஒருகட்டத்திற்கு மேல் எல்லா பந்தையும் அடித்து ஆட வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், 35 பந்தில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் எவின் லூயிஸ்.

லூயிஸ் 35 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 56 ரன்களை குவித்தாலும், அவர் அவுட்டாகும்போது, 10.3 ஓவரில் வெஸ்ட் இண்டீஸின் ஸ்கோர் வெறும் 73 ரன்கள் தான். சிம்மன்ஸின் மந்தமான பேட்டிங்கால் அணியின் ஸ்கோர் வேகமெடுக்காதது, அதன்பின்னர் வந்த அனைத்து பேட்ஸ்மேன்கள் மீதும் எதிரொலித்தது. 

அடித்து ஆடியே தீர வேண்டிய கட்டாயத்தில் பூரன்(12), கெய்ல்(12), ரசல்(5), ஹெட்மயர்(1), ஹைடன் வால்ஷ்(0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பொல்லார்டு மட்டும் 26 ரன்கள் அடித்தார். பிராவோ கடைசியில் 8 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே அடித்தது. 144 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்கா விரட்டுகிறது.
 

click me!