இந்திய அணியில் அவரை ஆடவைத்தது தான் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு காரணம்..! இன்சமாம் உல் ஹக் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 26, 2021, 2:49 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு, தவறான அணி தேர்வே காரணம் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுவதால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த எதிர்பார்ப்பே இரு அணிகளின் மீதான அழுத்தத்தை அதிகரித்துவிடும். அந்த அழுத்தத்தை எந்த அணி சிறப்பாக கையாண்டு ஆடுகிறதோ அந்த அணி தான் இதுவரை உலக கோப்பை தொடர்களில் ஜெயித்திருக்கிறது. 

அந்தவகையில், ஒருநாள் உலக கோப்பையில் மோதிய 7 முறையும், டி20 உலக கோப்பையில் மோதிய 5 முறையும் என மொத்தமாக உலக கோப்பைகளில் மோதிய 12 முறையும் இந்திய அணியே வெற்றி பெற்று, பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பைகளில் 100% வின்னிங் ரெக்கார்டை வைத்திருந்தது.

அந்த ரெக்கார்டை இந்த டி20 உலக கோப்பையில் தகர்த்தெறிந்தது பாகிஸ்தான். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டி20 உலக கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. 

பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் மிகச்சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி, ஆட்டம் முழுவதும் முழுக்க முழுக்க இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றி பெற்றது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷாஹித் அஃப்ரிடி, யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக் ஆகியோரால் சாதிக்க முடியாததை சாதித்து காட்டியது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. பாபர் அசாமின் கேப்டன்சியும் மிக அருமையாக இருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. அதற்கு 6வது பவுலிங் ஆப்சன் இல்லாததும் ஒரு காரணம். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீசுமளவிற்கு ஃபிட்னெஸுடன் இல்லாதது, இந்திய அணியின் காம்பினேஷனை ஒட்டுமொத்தமாக பாதிக்கிறது. அவர் பந்துவீசாததால் 5 பவுலர்களுடன் ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஓரளவிற்கு நியாயமான 6வது பவுலிங் ஆப்சன் கேப்டன் கோலிக்கு கிடைக்கவில்லை. பந்துவீச முடியாத ஹர்திக் பாண்டியாவை ஆடும் லெவனில் சேர்ப்பது, இனிவரும் போட்டிகளிலும் இந்திய அணி காம்பினேஷனை வலுவில்லாததாக்கும்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை ஆடவைத்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள இன்சமாம் உல் ஹக், ஹர்திக் பாண்டியாவை ஆடவைத்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. ஹர்திக்கை தேர்வு செய்தது சரியான தேர்வு அல்ல. தான் எந்தமாதிரியான அணியுடன் ஆடுகிறோம் என்பதை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நன்கு அறிந்துவைத்திருந்தார். ஆனால் இந்தியா அப்படியில்லை.

ஹர்திக் பாண்டியா தோள்பட்டையை பிடித்துக்கொண்டு வெளியேறும்போதே, இது இந்திய அணிக்கு பெரிய பிரச்னையாக இருக்கும் என்று நினைத்தேன். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மாதிரியான ஹை வோல்டேஜ் போட்டியில் ஏதேனும் காயம் இருந்தால் கூட அதை வெளிப்படையாக காட்டக்கூடாது. சச்சின் டெண்டுல்கர் எல்லாம் காயம் அடைந்தால்கூட வலியை வெளியே காட்டமாட்டார். சச்சினுக்கு காயம் என்பது எதிரணி வீரர்களுக்கு தெரியாது. பாண்டியா தோள்பட்டையை பிடித்து வெளியேறிவிட்டு, ஃபீல்டிங் செய்ய வராதபோதே இந்திய அணிக்கு அழுத்தம் அதிகரித்துவிட்டது. 

இந்திய அணி 6வது பவுலருடன் ஆடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாபர் அசாமிற்கு, முகமது ஹஃபீஸ் பலம் சேர்த்தார். ஹஃபீஸ் பந்துவீசியதால், இமாத் வாசிமிற்கு 4 ஓவரையும் முழுவதுமாக கொடுக்காமல் ஹஃபீஸிடம் 2 ஓவர்களை கொடுத்து கடத்தினார் ஹஃபீஸ். ஷோயப் மாலிக்கும் பந்துவீசுவார். இந்திய அணிக்கு 6வது பவுலிங் ஆப்சன் இல்லாததுதான் பெரிய பிரச்னையாக அமைந்துவிட்டது என்று இன்சமாம் உல் ஹக் கூறினார்.
 

click me!