வருண் பவுலிங்கை பாகிஸ்தான் தெருக்களில் கிரிக்கெட் ஆடும் பசங்களே கிழித்து எடுத்துருவாய்ங்க - சல்மான் பட்

Published : Oct 25, 2021, 10:15 PM IST
வருண் பவுலிங்கை பாகிஸ்தான் தெருக்களில் கிரிக்கெட் ஆடும் பசங்களே கிழித்து எடுத்துருவாய்ங்க - சல்மான் பட்

சுருக்கம்

வருண் சக்கரவர்த்தி எல்லாம் பாகிஸ்தானுக்கு ஒரு மாயாஜால ஸ்பின்னரே கிடையாது என்றும், அவரது பவுலிங்கை பாகிஸ்தானில் தெருவில் கிரிக்கெட் ஆடும் சிறுவர்களே கிழித்து எடுத்துவிடுவார்கள் என்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.  

டி20 உலக கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற பேரார்வத்துடன் இந்திய அணியில் எடுக்கப்பட்டவர் தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. இந்திய அணியில் கடந்த 3-4 ஆண்டுகளாக நட்சத்திர ஸ்பின்னராக ஆடிவந்த யுஸ்வேந்திர சாஹல் கூட அணியில் எடுக்கப்படாமல் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் எடுக்கப்பட்டனர்

ஆரம்பத்திலிருந்தே மாயாஜால ஸ்பின்னர் என்ற அடையாளத்துடன் ஐபிஎல்லிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் அடையாளப்படுத்தப்பட்டவர் வருண் சக்கரவர்த்தி. 2019ல் நடந்த 13வது சீசனில் முதல் முறையாக ஐபிஎல்லில் ஆடினார் வருண். அந்த சீசனில் பஞ்சாப் அணியில் ஆடிய வருணுக்கு கேகேஆருக்கு எதிரான போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அவர் ஐபிஎல்லில் வீசிய முதல் ஓவரையே சுனில் நரைன் பொளந்துகட்ட, அதன்பின்னர் வருணுக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை. அடுத்த சீசனில்(2020) வருணை ஏலத்தில் எடுத்த கேகேஆர் அணி அவருக்கு சில வாய்ப்புகள் அளித்தன.

ஆனால் ஐபிஎல் 14வது சீசனில்(2021) கேகேஆர் அணியில் சுனில் நரைனுடன் இணைந்து பிரதான ஸ்பின்னராக ஆடிய வருண் சக்கரவர்த்தி, எதிரணி பேட்ஸ்மேன்களை ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தியதுடன் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொடுத்தார்.

அதிலும், டி20 உலக கோப்பை நடக்கும் இதே அமீரக ஆடுகளங்களில் தான் ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாகமும் நடந்தது. அமீரகத்தில் வருண் சிறப்பாக வீசியதன் விளைவாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.

அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய போட்டியில் அவரது பவுலிங் கொஞ்சம் கூட எடுபடவில்லை. அவர் பாகிஸ்தானுக்கு எதிராக முதல்முறையாக ஆடினார். ஆனாலும் பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரையும் வருண் சர்ப்ரைஸ் செய்யவேயில்லை. அவரது பவுலிங்கை பாபரும் ரிஸ்வானும் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை.

வருண் சக்கரவர்த்தியின் 4 ஓவர்களை மிகத்தெளிவாகவும் சுலபமாகவும் எதிர்கொண்டு ஆடினர். வருண் 4 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்தார். அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

இந்நிலையில், வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட்,  வருண் சக்கரவர்த்தி மாயாஜால ஸ்பின்னராக இருக்கலாம். ஆனால் அவர் எந்தவிதத்திலும் பாகிஸ்தான் வீரர்களை சைப்ரைஸ் செய்யவில்லை. பாகிஸ்தானில் தெருக்களில் கிரிக்கெட் ஆடும் சிறுவர்கள் கூட வருணின் பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு பேட்டிங் ஆடுவார்கள். ஏனெனில், பாகிஸ்தான் தெருக்களில் விளையாடும் சிறுவர்களே கைவிரல்களில் பந்தை வைத்து பல வித்தைகளை செய்வார்கள்; நல்ல வேரியேஷனிலும் வீசுவார்கள்.

இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் கூட அவரது கிரிக்கெட் கெரியரின் தொடக்கத்தில் பல அணிகளை தொந்தரவு செய்தார். ஆனால் அவர் எந்தவிதத்திலும் பாகிஸ்தானை பாதிக்கவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் மெண்டிஸின் பவுலிங்கை அடித்து நொறுக்கியதில், அதன்பின்னர் இந்தியாவுக்கு எதிராகக்கூட அவரை சேர்ப்பதை நிறுத்திவிட்டது இலங்கை அணி என்றார் சல்மான் பட்.
 

PREV
click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி
Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?