எங்கே செல்லும் இந்த பாதை..? ஐபிஎல் அணியை வாங்கிய சூதாட்ட நிறுவனம்

By karthikeyan VFirst Published Oct 26, 2021, 6:46 PM IST
Highlights

ஐபிஎல்லில் சூதாட்ட சர்ச்சைகள் எழுந்ததை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிவர். ஆனால் ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கவுள்ள அகமதாபாத் அணியை ரூ.5,166 கோடிக்கு வாங்கியுள்ள சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம், பல்வேறு நாடுகளில் சூதாட்ட நிறுவனங்களை நடத்திவரும் நிறுவனம் ஆகும்.
 

”கிரிக்கெட்’ என்றதுமே கிரிக்கெட்டை பிடிக்காத/விரும்பாத பலர் உடனே கூறும் முதல் வார்த்தை சூதாட்டம் என்பதுதான். கிரிக்கெட்டில் சூதாட்ட சர்ச்சை என்பது காலங்காலமாக இருந்துவருகிறது. சர்வதேச கிரிக்கெட்டையே சூதாட்டமாக பார்ப்பவர்களுக்கு, சூதாட்ட வசைபாட வசமாக சிக்கியது ஐபிஎல் தொடர். 

டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த ஆண்டே ஐபிஎல் தொடர் இந்தியாவில் தொடங்கப்பட்டது. ஐபிஎல்லில் நூழிலையில் ஆட்டத்தின் முடிவுகள் மாறிய பல தருணங்களில் ”இதெல்லாம் ஃபிக்ஸிங்” என்று பலர் கூறக்கேட்டதுண்டு. ஐபிஎல்லில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி 7 ஆண்டுகள் தடைபெற்றார் ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த். சூதாட்ட சர்ச்சையால் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் 2 ஆண்டுகள்(2016, 2017) தடைபெற்றன.

ஐபிஎல் தொடருடன் சூதாட்ட சர்ச்சை நீண்டகாலமாக தொடர்ந்துவரும் நிலையில், ஐபிஎல்லில் புதிதாக களமிறங்கவுள்ள 2 அணிகளில் ஒன்றான அகமதாபாத் அணியை சூதாட்ட நிறுவனமே வாங்கியிருக்கிறது.

ஐபிஎல் 15வது சீசனில் கூடுதலா 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய மைதானத்தை கொண்ட அகமதாபாத் நகரை மையப்படுத்திய அணி ஒன்று. மற்றொன்று லக்னோ அணி. லக்னோ அணியை ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கியிருக்கிறது. அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5,166 கோடிக்கு வாங்கியுள்ளது.

அகமதாபாத் அணியை வாங்கிய இந்த சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம், உலகம் முழுதும் சூதாட்ட நிறுவனங்களை நடத்திவரும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் மீது ஏற்கனவே பல சர்ச்சைகள் உண்டு. முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளை பெற்று, அவற்றை லாபம் தரக்கூடிய பல தொழில்களில் முதலீடு செய்து, முதலீட்டாளர்களுக்கு லாபம் பெற்றுத்தருவதை நோக்கமாக கொண்ட இந்த நிறுவனம், ஐரோப்பாவின் லக்ஸம்பர்க் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கிவருகிறது.

உலகம் முழுதும் 25 இடங்களில் இந்த நிறுவனத்திற்கு அலுவலகம் உள்ளது. இந்தியாவில் வர்த்தக தலைநகரான மும்பையில், சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.5,63,000 கோடி ஆகும்.  ஐடி, விலையுயர்ந்த ஸ்விஸ் வாட்ச்சுகள் தயாரிப்பு, ஜவுளி, மருந்து நிறுவனங்கள் என பலவிதமான தொழில்களில் முதலீடு செய்திருந்தாலும், லாட்டரி, சூதாட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்வதில் இந்த நிறுவனத்தினருக்கு ஆர்வம் அதிகம்.

மலேசியாவில் செயல்பட்டு மாக்னம் கார்ப்பரேஷன் லாட்டரி, பிரிட்டனின் ஸ்கை பெட்டிங் & கேமிங் மற்றும் ஜெர்மனியின் விளையாட்டு சூதாட்ட நிறுவனமான டிபிகோ ஆகிய லாட்டரி/சூதாட்ட நிறுவனங்கள், சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானதுதான்.

விளையாட்டு துறையில் அதிக ஆர்வத்துடன் முதலீடு செய்யும் இந்த நிறுவனம், ஃபார்முலா 1 நிறுவனத்தை வாங்கி 12 ஆண்டுகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஃபார்முலா 1-ல் ரூ.15,400 கோடி முதலீடு செய்து ரூ.36,200 கோடி வருவாய் ஈட்டியது. பந்தயத்தை ஒழுங்காக நடத்துவதிலோ, கட்டமைப்பை வலுப்படுத்துவதிலோ கவனம் செலுத்தாமல், வெறும் லாபத்திலும், பணத்திலும் மட்டுமே கவனம் செலுத்தியது இந்த நிறுவனம். அதன்விளைவாக, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட, சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  பந்தயத்தில் பங்கேற்கும் அணிகள் இந்நிறுவனத்தின் மீது புகார் அளித்ததால் ஃபார்முலா 1 நிறுவனத்தை 2017ம் ஆண்டு சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் விற்றுவிட்ட நிலையில், கோடிக்கணக்கில் பணம் புழங்கும் உலகின் மிகப்பெரிய டி20 லீக் தொடரான ஐபிஎல்லில் அகமதாபாத் அணியை வாங்கியுள்ளது. 
 

click me!