தோனிக்கும் சாஸ்திரிக்கும் இடையே முட்டிக்காம இருந்தா சரிதான்..! அதுக்காக நான் வேண்டிக்கிறேன் - கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Sep 9, 2021, 2:43 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டிருப்பது குறித்து முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

ஸ்டாண்ட்பை வீரர்கள் - ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். 2007ல் முதல் டி20 உலக கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்த கேப்டன் தோனி. 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி கோப்பைகளை வென்றவர் தோனி. எனவே அவரது அனுபவம் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு வெகுவாக பயன்படும் என்பதால், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தோனியின் நியமனம் குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் 2007ல் டி20 உலக கோப்பையை வென்றிருக்கிறது. எனவே தோனியை ஆலோசகராக நியமித்தது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும்.

ஆனால் அதேவேளையில், வியூகங்கள் வகுப்பது, அணி தேர்வு ஆகியவற்றில் தோனிக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டியது அவசியம். அப்படி எதுவும் இல்லையென்றால் தோனியின் நியமனம் இந்திய அணிக்கு பெரும் பலமாக இருக்கும்.

தோனிக்கும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவருக்கும் இடையே கருத்தொற்றுமை இருக்க வேண்டும். அதற்காக நான் பிரார்த்திக்கிறேன். அதுமட்டும் நடந்துவிட்டால், அதைவிட பெரிய நல்ல செய்தி இந்தியாவிற்கு எதுவுமிருக்க முடியாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!