டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலை எடுக்காதது ஏன்..? தலைமை தேர்வாளர் விளக்கம்

By karthikeyan VFirst Published Sep 8, 2021, 10:59 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலை தேர்வு செய்யாததற்கான காரணத்தை தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

கோலி தலைமையிலான இந்திய அணியில் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸான தேர்வு என்றால் அது, சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் தான். 2017ம் ஆண்டு கடைசியாக டி20 கிரிக்கெட்டில் ஆடிய அஷ்வின், அதன்பின்னர் கடந்த 4 ஆண்டுகளாக டி20 அணியில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் அஷ்வின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்பின்னர்களாக அஷ்வின், ஜடேஜா, ராகுல் சாஹர், அக்ஸர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல்லில் கோலி கேப்டனாக செயல்படும் ஆர்சிபி அணியிலும், 2017லிருந்து கோலி தலைமையிலான இந்திய அணியிலும் அவரது ஆஸ்தான ஸ்பின்னராக திகழ்ந்த ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

தோனி தலைமையிலான இந்திய அணியில் ஆடிவந்த அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடியை ஓரங்கட்டிவிட்டுத்தான், 2017லிருந்து குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடிக்கு முன்னுரிமை கொடுத்து இந்திய அணியில் ஆடவைத்தார் கோலி. இந்திய அணியில் வளர்ந்த அதேவேகத்தில் அணியிலிருந்து வெளியேற்றவும்பட்டுள்ளனர் குல்தீப் - சாஹல்.

குல்தீப் யாதவ் 2019 ஒருநாள் உலக கோப்பைக்கு பின்பே ஓரங்கட்டப்பட்டுவிட்டார். ஆனால் கோலியின் ஆஸ்தான ஸ்பின்னரான சாஹல், இந்திய டி20 அணியில் தொடர்ந்து ஆடிவந்தார். இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னரான சாஹல் அணியில் எடுக்கப்படாமல், மற்றொரு வளர்ந்துவரும் ரிஸ்ட் ஸ்பின்னரான ராகுல் சாஹர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

சாஹல் புறக்கணிப்பு குறித்து விளக்கமளித்த தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா, வேகமாக பந்துவீசும் ஸ்பின்னர்களுக்கு அணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே தான் ராகுல் சாஹர் அணியில் எடுக்கப்பட்டார். மாயாஜால பவுலர் என்ற வகையில் வருண் சக்கரவர்த்தி சர்ப்ரைஸ் பேக்கேஜ் என்று சேத்தன் ஷர்மா தெரிவித்தார். 
 

click me!