ரவி சாஸ்திரியின் பதவிக்காலத்தில் இந்தியா பண்ண தரமான சம்பவம் அதுதான்..! கரெக்ட்டா சொன்ன கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Dec 27, 2021, 7:17 PM IST
Highlights

ரவி சாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்காலத்தில் இந்திய அணி செய்த தரமான சம்பவம் எதுவென்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
 

2017ம் ஆண்டிலிருந்து 2021 டி20 உலக கோப்பை வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார் ரவி சாஸ்திரி. சாஸ்திரிக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையேயான நல்ல புரிதலால் தான், 2019ம் ஆண்டுடன் முடிந்த சாஸ்திரியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

ரவி சாஸ்திரியின் பதவிக்காலத்தில் இந்திய அணி ஐசிசி டிராபி எதையும் வெல்லவில்லை என்றாலும், பல வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை குவித்ததுடன், வெளிநாடுகளில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்தது. 

குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் ரவி சாஸ்திரியின் பதவிக்காலத்தில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. 2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. அதன்பின்னர் 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கோலி இல்லாமலேயே இந்திய அணி டெஸ்ட் தொடரை ஆஸி., மண்ணில் 2வது முறையாக வென்று சாதனை படைத்தது.

இவ்வளவுக்கும் 2020-2021 சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் பலர் காயங்களாலும் மற்றும் பல காரணங்களாலும் ஆடமுடியாமல் தொடர்ச்சியாக அணியிலிருந்து விலகிக்கொண்டே இருந்தனர். ஆனாலும் ரஹானேவின் கேப்டன்சியில் இருக்கிற வீரர்களை வைத்து இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், ரவி சாஸ்திரியின் பதவிக்காலத்தில் இந்திய அணி செய்த தரமான சம்பவம் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், 2020-21 ஆஸி., சுற்றுப்பயணத்தில் அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட்டில் வெறும் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. இப்படியொரு மோசமான ஆட்டத்துக்கு பிறகு, எந்தவொரு அணியாக இருந்தாலும், அந்த அணியின் தன்னம்பிக்கை மோசமாகியிருக்கும். ஆனால் அது நடக்காமல் பார்த்துக்கொண்டார் ரவி சாஸ்திரி. அந்த 36க்கு ஆல் அவுட் சம்பவத்துக்கு பிறகு, இந்த 36 என்பதை உங்கள்(இந்திய அணி) அடையாளமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சாஸ்திரி கூறியதாக நான் படித்தேன்.

ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் கோலியும் இல்லாத சூழலில், அணியை மிக  அருமையாக வழிநடத்தினார் ரஹானே. ரஹானேவின் கேப்டன்சியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினர். கிட்டத்தட்ட ஏ அணி மாதிரியான ஒரு அணியை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ரவி சாஸ்திரி தான். இந்திய அணியில் ஆடுவதற்கான வாய்ப்புக்காக காத்திருந்த இளம் வீரர்களை சரியாக கையாண்டு, அவர்களை வழிநடத்தி அந்த வெற்றியை சாத்தியமாக்கினார் சாஸ்திரி என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!