
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (26ம் தேதி) தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 60 ரன்கள் அடித்தார். புஜாரா ரன்னே அடிக்காமல் அவுட்டானார்.
கோலி 35 ரன்கள் அடித்தார். அபாரமாக ஆடி சதமடித்தார் ராகுல். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்துள்ளது. ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிப்பதற்கான நல்ல அடித்தளம் அமைந்த நிலையில், செட்டில் ஆன பேட்ஸ்மேன்கள் ராகுல், ரஹானே களத்தில் இருந்ததால், 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமல்லாது 2ம் நாள் ஆட்டம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி மெகா ஸ்கோரை அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்களை அடித்து ஆட அனுமதிக்காமல், அடித்து ஆடியது மழை. முதல் செசன் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2வது செசனிலும் மழை தொடர்ந்த மழை, இனிமேல் நிற்பதற்கான வாய்ப்பே இல்லை என்ற சூழலில், 2ம் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மழையால் 2ம் நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது, தென்னாப்பிரிக்க அணிக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த போட்டியில் 2ம் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி மெகா ஸ்கோரை அடித்திருந்திருக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். ஆனால் மோசமான நிலையில் இருந்த தென்னாப்பிரிக்க அணிக்கு, மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது சாதகமாக அமையும்.