இந்தியா - நியூசிலாந்து மேட்ச்சில் இந்த சுவாரஸ்யமான விஷயத்தைத்தான் நான் பார்க்க விரும்புறேன்..! கவாஸ்கர் ஆர்வம்

By karthikeyan VFirst Published Oct 31, 2021, 6:50 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டியில் டிரெண்ட் போல்ட் ரோஹித் சர்மாவுக்கு எப்படி பந்துவீசப்போகிறார் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இங்கிலாந்து (க்ரூப் 1) மற்றும் பாகிஸ்தான் (க்ரூப் 2) ஆகிய 2 அணிகளும் ஒரு அடியை எடுத்து அரையிறுதிக்குள் வைத்துவிட்டன. 

அரையிறுதிக்கு 2வது  அணியாக முன்னேற, க்ரூப் 1ல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயும், க்ரூப் 2ல் இந்தியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயும் போட்டி நிலவுகிறது.

அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்ய வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் இன்று துபாயில் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இது ஒரு நாக் அவுட் போட்டியை போன்றது என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்குகின்றன.

இந்திய அணி காம்பினேஷன் குறித்த பல்வேறு விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்த நிலையில், இந்திய அணி நிறைய மாற்றங்களை செய்யக்கூடாது; அப்படி செய்தால் அது பயத்தை வெளிப்படுத்துவதாக அமையும் என்று கூறியிருந்த சுனில் கவாஸ்கர், இந்த போட்டியில் டிரெண்ட் போல்ட் ரோஹித் சர்மாவுக்கு எப்படி பந்துவீசப்போகிறார் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பந்து புதிதாக இருக்கும்போது நன்றாக ஸ்விங் ஆகும். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக புதிய பந்தில் டிரெண்ட் போல்ட்டை பந்துவீச வைக்காத நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்தியாவுக்கு எதிராக அவரை எப்படி பயன்படுத்துகிறார், போல்ட் ரோஹித்துக்கு எப்படி பந்துவீசப்போகிறார் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

அவர் அப்படி கூற காரணம், பொதுவாகவே ரோஹித் சர்மா இடது கை ஃபாஸ்ட் பவுலர்களுக்கு எதிராக இன்னிங்ஸின் தொடக்கத்தில் பயங்கரமாக திணறியிருக்கிறார் என்பதுதான். இடது கை ஃபாஸ்ட் பவுலர்கள் ஸ்டம்ப்புக்கு நேராக வீசும் பந்திற்கு அதிகமுறை ஆட்டமிழந்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட ஷாஹீன் அஃப்ரிடி அப்படித்தான் முதல் பந்திலேயே ரோஹித்தை வீழ்த்தினார்.

எனவே தனது அந்த பலவீனத்தை அடித்து உடைக்க ரோஹித் சர்மா தீவிர பயிற்சி மேற்கொண்டாலும், புள்ளிவிவரங்கள் அவருக்கு எதிராகவே உள்ளன. இதுவரை இடது கை ஃபாஸ்ட் பவுலர்களுக்கு எதிராக 14 முறை ஆட்டமிழந்திருக்கிறார் ரோஹித் சர்மா. நியூசிலாந்தின் இடது கை ஃபாஸ்ட் பவுலரான டிரெண்ட் போல்ட்டிற்கு எதிராக 7 இன்னிங்ஸ்களில் 29 ரன்கள் மட்டுமே அடித்து, 3 முறை ஆட்டமிழந்திருக்கிறார் ரோஹித் சர்மா.  எனவே இந்த போட்டியில் ரோஹித் - போல்ட் இடையேயான போட்டி, கவாஸ்கர் கூறியதை போலவே பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.
 

click me!