நான் என்னடா தப்பு பண்ணேன்? இதுதான் அந்த பையனோட மைண்ட்வாய்ஸா இருக்கும்! தேர்வாளர்கள் பதில் சொல்லணும் - கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Nov 10, 2021, 8:39 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ராகுல் சாஹரை எடுக்காதது குறித்து தேர்வாளர்கள் அவருக்கு தெளிவுபடுத்தியாக வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக மதிப்பிடப்பட்ட இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளிடமும் படுதோல்வி அடைந்ததால், அதன்பின்னர் ஆடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும்கூட, இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. அதனால் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது இந்திய அணி.

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பின்னடைவிற்கு தவறான அணி தேர்வே காரணம். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக திகழ்ந்த ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் நல்ல ஃபார்மில் அருமையாக வீசிக்கொண்டிருந்த நிலையில், அவரை அணியில் எடுக்காமல் ராகுல் சாஹரை தேர்வு செய்தனர் தேர்வாளர்கள். அணியின் முதன்மை ஸ்பின்னருக்கு பதிலாக தேர்வு செய்த ஸ்பின்னருக்கு ஆடும் லெவனில் முதல் 4 போட்டிகளில் வாய்ப்பே அளிக்கப்படாதது பெரும் வியப்பாக இருந்ததுடன், முரணாகவும் இருந்தது.

அதேபோல் டி20 கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் கொண்ட பேட்டிங்கும் ஆடவல்ல ஸ்விங் ஃபாஸ்ட் பவுலரான தீபக் சாஹரையும் இந்திய மெயின் அணியில் எடுக்கவில்லை. அவரை ஸ்டாண்ட்பை வீரராகத்தான் தேர்வு செய்தனர். அதேபோல மாயாஜால ஸ்பின்னர் என நம்பி அணியில் எடுக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி 3 போட்டிகளில் ஆடி ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இப்படியாக அணி தேர்வில் செய்த தவறுகள் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.

ராகுல் சாஹருக்கு முதல் 4 போட்டிகளில் ஆட வாய்ப்பே கொடுக்காமல், நமீபியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாத ராகுல் சாஹர், 30 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட ராகுல் சாஹர் பெரிதாக எந்த தவறுமே செய்யவில்லை. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடக்கவுள்ள டி20 தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ராகுல் சாஹர் இடம்பெறவில்லை. சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழுவின் சிந்தனை என்னவென்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. தேர்வாளர்களின் செயல்பாடுகள் வித்தியாசமாக உள்ளன.

இந்நிலையில், ராகுல் சாஹரை அணியில் எடுக்காதது குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், சாஹலும் தீபக் சாஹரும் ஏற்கனவே தங்களது திறமைகளை நிரூபித்த அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் இருவரும் மீண்டும் டி20 அணியில் இடம்பெற்றிருப்பது அணிக்கு நல்லது. ஆனால் அதேவேளையில் ராகுல் சாஹர், தான் என்ன தவறு செய்தேன்; நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் ஏன் தன்னை எடுக்கவில்லை என்பது குறித்து உண்மையாகவே வியந்துபோயிருப்பார். உலக கோப்பைக்கான அணியில் எடுக்கப்பட்ட அவருக்கு ஒரேயொரு போட்டியில் தான் ஆட வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அவர் பெரிதாக எந்த தவறும் செய்யவில்லை. ஓவருக்கு ஏழரை ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆனாலும் அவரை அணியில் எடுக்கவில்லை. அவர் உண்மையாகவே தன் மேல் என்ன தவறு இருக்கிறது என்பது புரியாமல் இருப்பார். தேர்வுக்குழு அவரை எடுக்காததற்கான காரணத்தை அவரிடம் தெளிவுபடுத்துவார்கள் என நம்புவதாக கவாஸ்கர் தெரிவித்தார். 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ரவிசந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.
 

click me!