T20 World Cup ஃபைனலுக்கு முன்னேறப்போவது யார்..? இங்கிலாந்து vs நியூசிலாந்து பலப்பரீட்சை.. டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Nov 10, 2021, 7:23 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

இன்று அபுதாபியில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் ஃபைனலில் மோதிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள், இந்த உலக கோப்பையின் அரையிறுதியில் மீண்டும் மோதுகின்றன.

அந்த உலக கோப்பை ஃபைனலில் நூழிலையில் கோப்பையை இழந்த நியூசிலாந்து அணி, இந்த நாக் அவுட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது. ஒருநாள் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, டி20 உலக கோப்பையையும் தூக்கும் முனைப்பில் உள்ளது.

நியூசிலாந்து அணியின் பெரிய பலமே கேன் வில்லியம்சனின் கேப்டன்சியும், வீரர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பும் தான்.  ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் சிறப்பான திட்டங்களுடன் செல்லும் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரர்களுக்கு எதிராக பக்கா திட்டங்களுடன் தான் களமிறங்கிய நியூசிலாந்து அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்கியுள்ளது.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.

இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் காயத்தால் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக இன்றைய அரையிறுதி போட்டியில் எதிர்பார்த்தபடியே ஜோஸ் பட்லருடன் ஜானி பேர்ஸ்டோ தொடக்க வீரராக இறங்குகிறார். ராய்க்கு மாற்று வீரராக மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக சாம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், மொயின் அலி, ஒயின் மோர்கன் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், மார்க் உட், அடில் ரஷீத்.
 

click me!