IND vs AUS: அவருக்கு கடைசியா ஒரு சான்ஸ் கொடுங்க.. சரியா வரலைனா தூக்கிருங்க..! கவாஸ்கர் கருத்து

By karthikeyan V  |  First Published Feb 12, 2023, 6:08 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பிவரும் கேஎல் ராகுலை வெங்கடேஷ் பிரசாத் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அதுகுறித்து கவாஸ்கர் தனது கருத்தை கூறியுள்ளார்.
 


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளிலும் சேர்த்தே ரோஹித், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய மூவர் மட்டும்தான் சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள்.

ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்தார். ரோஹித் 120 ரன்களை குவித்தார். ஜடேஜா 70 ரன்களும், அக்ஸர் படேல் 84 ரன்களும் அடித்தனர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ரோஹித்தின் சதம் மற்றும் ஜடேஜா, அக்ஸர் படேலின் அரைசதங்களால் இந்திய அணி 400 ரன்களை குவித்தது. 223 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tap to resize

Latest Videos

IND vs AUS: நாக்பூரில் பிட்ச்சில் சதமடித்து சாதித்தது எப்படி..? ரோஹித் சர்மா விளக்கம்

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித்துடன் ராகுல் - கில் ஆகிய இருவரில் யார் இறங்குவார் என்பது பெரிய கேள்வியாக இருந்தது. ராகுல் ஃபார்மில் இல்லாமல் நீண்டகாலமாகவே சொதப்பிவரும் அதேவேளையில், ஷுப்மன் கில் அண்மைக்காலத்தில் டாப் ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு இரட்டை சதம் மற்றும் சதம் அடித்து அசத்தினார்.  ஷுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவரை புறக்கணிக்கமுடியாத சூழல் இருந்தது. அவரைத்தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் எழுந்தன.

ஆனாலும் முதல் டெஸ்ட்டில் ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். அதற்கு அவர் துணை கேப்டன் என்பதும் ஒரு காரணம். அதனால் அவரை புறக்கணிக்க முடியாத சூழல் உள்ளது. ஆனால் ராகுல் படுமந்தமாக பேட்டிங் ஆடி 20 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பினார். ராகுலின் பேட்டிங் அணுகுமுறை கடும் விமர்சனத்துக்குள்ளானது. தொடர்ச்சியாக சொதப்புவதால் அணியில் அவரது இடம் சந்தேகமாகியுள்ளது.

இந்நிலையில், ராகுலின் தேர்வை டுவிட்டரில் கடுமையாக விமர்சித்திருந்தார் வெங்கடேஷ் பிரசாத். ”8 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் ராகுல் அந்த தரத்தில் பேட்டிங் ஆடவில்லை. டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து அபாரமாக ஆடி ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்காமல் ராகுலுக்கு வாய்ப்பளிப்பது பாரபட்சமானது. அவரது தேர்வு திறமையின் அடிப்படையிலானது அல்ல; பாரபட்சமானது. டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அவரை நியமித்ததே தவறு. அஷ்வின், புஜாரா, ஜடேஜா ஆகிய மூவரில் ஒருவரைத்தான் துணை கேப்டனாக நியமித்திருக்க வேண்டும். துணை கேப்டனாக இருப்பதால் தான் ராகுல் அணியில் இடம்பெறுகிறார். அவரது தேர்வு பாரபட்சமானது என்று இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்திருந்தார் வெங்கடேஷ் பிரசாத்.

இந்நிலையில், கேஎல் ராகுல் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக நன்றாகத்தான் ஆடிவருகிறார். அவருக்கு இன்னும் ஒன்றிரண்டு வாய்ப்புகள் வழங்கலாம். டெல்லி டெஸ்ட்டிலும் ராகுல் தான் தொடக்க வீரராக ஆடுவார் என நினைக்கிறேன். அதிலும் சரியாக ஆடவில்லை என்றால், அதற்கு பின் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கலாம்.  

ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் நங்கூரம் போட்ட இந்தியா..! ஆஸி.,க்கு சரிவு

தென்னாப்பிரிக்காவில் ராகுல் சதமடித்ததை பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் சுட்டிகாட்டியிருந்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஸ்கோர் செய்வது கடும் சவாலானது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஸ்கோர் செய்தால் அதுவே பெரிய உத்வேகமாக அமையும். அவரது திறமைக்காக அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!