இந்திய அணி இதை மட்டும் செய்துவிட்டால் அடுத்த 2 ஆண்டுகளில் 2 உலக கோப்பைகளை தூக்குவது உறுதி - கவாஸ்கர் நம்பிக்கை

By karthikeyan VFirst Published Dec 28, 2021, 7:37 PM IST
Highlights

இந்திய அணி 2 சிறந்த ஆல்ரவுண்டர்களை கண்டுபிடித்து செட் செய்துவிட்டால், அடுத்த 2 ஆண்டுகளில் 2 உலக கோப்பைகள் உறுதி என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணி 2013ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஐசிசி டிராபியை கூட ஜெயிக்கவில்லை. முதல்முறையாக 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது. அதன்பின்னர் தோனி தலைமையிலான இந்திய அணி தான் ஐசிசி டிராபிக்களை வென்றது.

தோனி தலைமையில் 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி, 2011ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையையும், 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது. 2013ம் ஆண்டுக்கு பிறகு 8 ஆண்டுகளாக இந்திய அணி ஒரு ஐசிசி டிராபியைக்கூட ஜெயிக்கவில்லை.

2015 ஒருநாள் உலக கோப்பை, 2016 டி20 உலக கோப்பை, 2019 ஒருநாள் உலக கோப்பை ஆகிய 3 உலக கோப்பைகளிலும் அரையிறுதியுடன் வெளியேறியது. 2014ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ஃபைனலில் இலங்கையிடம் தோற்று கோப்பையை இழந்தது. 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் பாகிஸ்தானிடம் தோற்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சென்ற இந்திய அணி, ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்றது.

இப்படியாக கடந்த 8 ஆண்டுகளாக நாக் அவுட் போட்டிகளில் தோற்று கோப்பைக்கு அருகில் சென்று கோப்பையை தூக்கமுடியாத ஏமாற்றத்துடன் வெளியேறியது.

2022ம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2023ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை என அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரிய தொடர்கள் இருக்கும் நிலையில், இந்த உலக கோப்பைகளை வெல்ல இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பதை சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், நாங்கள் ஆடிய காலத்தில் எல்லாம் இப்போது மாதிரி அல்ல. 14 வீரர்களை கொண்ட அணியுடன் ஒரு மேனேஜர் இருப்பார். அந்த அணியை வைத்துக்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் கோலோச்சினோம். ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை, எத்தனை பவுன்ஸர்கள் வேண்டுமானால் வீசலாம். 

ஆனால் அப்போதைய இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் நிறைந்திருந்தார்கள். அதுதான் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றிகரமாக திகழ காரணம். 2007ல் டி20 உலக கோப்பை மற்றும் 2011ல் ஒருநாள் உலக கோப்பை ஆகிய உலக கோப்பைகளை வென்ற இந்திய அணிகளில் பவுலிங் வீசத்தெரிந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பேட்டிங் ஆடவல்ல பவுலர்கள் இருந்தார்கள். அதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம்.  எனவே 2 தரமான ஆல்ரவுண்டர்களை இந்திய அணி கண்டறிந்துவிட்டால், 2022ல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை மற்றும் 2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பை ஆகிய 2 உலக கோப்பைகளை அடுத்தடுத்து வெல்லலாம் என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்துவந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பந்துவீசமுடியாமல் அண்மைக்காலமாக திணறிவருகிறார். எனவே அவர் தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுவருகிறார்.

கடந்த ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் ஆடிய வெங்கடேஷ் ஐயர் நல்ல ஆல்ரவுண்டராக தெரிகிறார். ஷர்துல் தாகூரும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்துகிறார். எனவே 2 தரமான ஆல்ரவுண்டர்களை முடிவு செய்து அணியில் எடுத்தால் இந்திய அணி உலக கோப்பைகளை வெல்லலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!